Wednesday, 25 June 2014

தலித் மக்களுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைகளை அடித்து நொறுக்கிய சாதி இந்துக்கள்:

தலித் மக்களுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைகளை அடித்து நொறுக்கிய சாதி இந்துக்கள்: ஜனநாயகம் செவி சாய்க்குமா?
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தலித்துகளுக்கு முடி வெட்டக் கூடாது, சவரம் செய்யக் கூடாது என ஆதிக்க சாதியினர் சலூன் கடைக்காரர்களை மிரட்டியுள்ளனர். இதை மீறி தலித்துகளுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைக்காரர்க‌ள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடகத்தின் பெல்லாரி மாவட் டம், தாலூர் பகுதியில் சாதி பாகுபாடு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் இன்னமும் தொடர்கின்றன. தாலூரில் தலித்துகள் சலூன் கடைகளில் சுழல் நாற்காலியில் அமர்ந்து முடி திருத்திக்கொள்ளவோ, சவரம் செய்துகொள்ளவோ அனுமதியில்லை. மரத்தடியிலோ, ஒதுக்குப் புறமாகவோ அமர்ந்துதான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். தலித்துகளுக்கு பயன்படுத்திய கத்தி, கத்தரிக்கோல் போன்ற உபகரணங்களை சாதி இந்துக்களுக்கு பயன்படுத்தக் கூடாது. மீறினால் ஊர் பஞ்சாயத்தால் கடும் தண்டனை வழங்கப்படுவது காலங்காலமாக உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 
 
தாலூரில் தற்போது 5 சலூன் கடைகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் இங்கு வந்த சாதி இந்துக்கள், “தலித்துகளுக்கு நீங்கள் முடி வெட்டவோ, சவரம் செய்யவோ கூடாது. மீறினால் உங்கள் கடையும் இருக்காது. உங்கள் கையும் இருக்காது” என்று மிரட்டியதாக மஞ்சுநாத் என்ற முடி திருத்தும் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
மிரட்டலை மீறி 5 சலூன் கடைக்காரர்களும் தலித்துகளுக்கு தொடர்ந்தி முடி திருத்தி வந்துள்ளனர். இதையறிந்த ஆதிக்க சாதியினர் கடந்த சில தினங்களுக்கு முன் 5 சலூன் கடைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்கின்றனர்.

No comments:

Post a Comment