Wednesday, 11 June 2014

பாலியல் பலாத்காரம் செய்தவனை பிடித்து போலீசில் ஒப்படைத்த வீராங்கனை

பாலியல் பலாத்காரம் செய்தவனை பிடித்து போலீசில் ஒப்படைத்த வீராங்கனை
பொது இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, தப்பியோடிய வாலிபனை இளம்பெண் ஒருவர் பாய்ந்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுடெல்லியின் பாதுகாப்பு மிகுந்த பகுதிகளில் ஒன்றாக சாணக்யாபுரி கருதப்படுகிறது. இங்குள்ள நேரு பூங்காவில் நேற்று முன்தினம் மாலை இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 12-ம் வகுப்பு தேர்வின் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த அந்த இளம்பெண், மீண்டும் தேர்வெழுதி, முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தார். 

அந்த பெண்ணின் வீட்டருகே வசிக்கும் மஞ்சீத் என்ற வாலிபன் அதே பூங்காவுக்கு பொழுது போக்க வந்தான். இவரை பார்த்தவுடன் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்த மஞ்சீத், மெல்ல இருட்ட தொடங்கியவுடன் அத்துமீறலாக நடந்துக் கொள்ள ஆரம்பித்தான். 

சுதாரித்துக் கொண்ட அந்த பெண், சற்றும் தயங்காமல் போலீசாருக்கும், தனது உறவினர்களுக்கும் போன் செய்து உதவிக்கு அழைத்தார். சற்று நேரத்துக்குள் அப்பகுதியில் போலீஸ் வாகனத்தின் ‘சைரன்’ ஒலி கேட்கவே, நழுவி ஓட முயன்ற மஞ்சீத்தை விரட்டிச் சென்று பாய்ந்துப் பிடித்த இளம்பெண் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தார். 

அரியானா மாநிலத்தை சேர்ந்த மஞ்சீத் எல்க்ட்ரீஷியனாக வேலை செய்தபடி, அந்த இளம்பெண்ணின் வீட்டருகே வசித்து வருகிறான் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரையடுத்து, பிடிபட்ட மஞ்சீத் மீது பலாத்கார வழக்கு பதிவுசெய்துள்ள சாணக்யாபுரி போலீசார், தப்பியோட முயன்ற மஞ்சீத்தை விரட்டிச் சென்று பாய்ந்துப் பிடித்த அந்த இளம்பெண்ணின் வீரத்தை வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment