மன அழுத்தம் அதிகரிக்கக்கூடிய ஐ.டி. போன்ற தொழில்துறைகளில் பணிபுரியும் இளைய தலைமுறையினரிடம் உடல் ஆரோக்கியம் குறித்த பல பிரச்சினைகள் தோன்றுவது என்பது சமீப காலத்தில் சகஜமாகக் காணப்படுகின்ற விஷயமாக உள்ளது. இப்போது இந்தப் பட்டியலில் புதிதாக காச நோயும் இடம் பெற்று வருகின்றது என்று கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை அளித்துள்ளனர்.
தற்போது தங்களிடம் வரும் நோயாளிகளில் 60 சதவிகிதத்தினர் மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஐ.டி. போன்ற தொழில்துறைகளில் பணி புரிந்து வருவது வெளிப்படையாகத் தெரிகின்றது. இவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என்று தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்ஐஆர்டி) முன்னாள் துணை இயக்குனரும், மருத்துவருமான டாக்டர் மஞ்சுளா தத்தா குறிப்பிட்டுள்ளார்.
பணி புரிவோருக்கு ஏற்படும் மன அழுத்தமும், ஆரோக்கியமற்ற உணவு முறைகளுமே உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் விஷயங்களாகும் இவர்களிடத்தில் காணப்படும் காச நோய்க்கான பாதிப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். எனினும் பணி நிமித்தம் ஏற்படும் நாள்பட்ட மன அழுத்தம் ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியைப் பாதிப்பதைக் காட்ட ஆழ்ந்த ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன என்று என்ஐஆர்டியின் இயக்குனர் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் கூறுகின்றார். அதுமட்டுமின்றி நெருக்கமான மூடிய சூழலில் இவர்கள் பணி புரிவது நோய்த்தொற்றை பரப்புவதாகவே அவர் கருதுகின்றார்.
நுரையீரல் காசநோய் என்பது இவர்கள் மத்தியில் குறைவாகக் காணப்படும்போதும் வயிறு, இதயம், முதுகு, நிணநீர் முடிச்சு மற்றும் எலும்பு போன்ற பகுதிகளில் காணப்படும் வெளித்தெரியாத நோய்த்தாக்குதலுக்கு ஆளாகின்றார்கள். இதன் காரணமாக அவர்கள் காசநோய்க்கான சோதனைகளையோ, சிகிச்சையையோ எடுத்துக் கொள்வதில்லை. கருப்பை காசநோயால் தாக்கப்படும் இளம்பெண்கள் அதற்குண்டான சிகிச்சையை மேற்கொள்ளாமல் குழந்தைப் பேற்றிற்கான சிகிச்சையை மேற்கொண்டால் வருந்தத்தக்கதாகவே இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உள்ளுறை காசநோய் இருப்பதாக உலக சுகாதாரக் கழகம் தெரிவிக்கின்றது. இவர்களில் குறைந்தது 10 சதவிகிதத்தினர் இந்த நோய்த்தொற்றின் அதிகரிக்கும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்றும் அந்த அமைப்பின் கணக்கீடுகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment