நோயை குணப்படுத்துவதாக கூறி, சிறுமியை இரும்புக் கம்பியால் குத்திக் சித்ரவதை செய்ததுடன், கற்பழிக்கவும் முயன்ற பயங்கர சம்பவம் ராமநகரில் நடந்து உள்ளது. இதுதொடர்பாக மந்திரவாதியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மாணவிக்கு உடல் நலக்குறைவு
மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா சோமனஹள்ளியை சேர்ந்த பெண் ஒருவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய 14 வயது மகள் அனிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10–ம் வகுப்பு செல்ல இருந்தாள். பள்ளி விடுமுறை நாளில் ராமநகர் டவுன் அருகே எடமாரனஹள்ளியில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனிதா சென்றிருந்தாள். அப்போது அனிதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு அனிதா சிகிச்சை பெற்றாள். ஆனாலும் அவளது உடல்நலம் சரியாகவில்லை. ஏற்கனவே அனிதாவுக்கு எளிதில் பயந்து விடும் நோயும் இருந்தது. இதை குணப்படுத்துவதற்காக ராமநகர் டவுனை சேர்ந்த சையத் முசீர் (வயது 45) என்ற மந்திரவாதியை அனிதாவின் மாமாவும், அத்தையும் அணுகினர். மேலும் அவளை குணப்படுத்த ரூ.6 ஆயிரத்தையும் கட்டணமாக கொடுத்தனர்.
கம்பியால் குத்திக் கொடுமை
உடனே அனிதாவுக்கு முதல்நாளில் எலுமிச்சை பழம், வெற்றிலை, பாக்கு வைத்து சையத் முசீர் சில பூஜைகளை செய்தார். மேலும் பயப்படாமல் இருக்க தாயத்து கொடுத்ததாகவும் தெரிகிறது. அதன்பிறகு, நோயை குணப்படுத்துவதாக கூறி சிறுமியை குளிக்க வைத்ததாகவும், பின்னர் மருந்து என்று கூறி மயக்க மருந்து கொடுத்து கற்பழிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அனிதாவின் உடலில் பல்வேறு இடத்தில் சையத் முசீர் இரும்பு கம்பியால் குத்தி சித்ரவதை செய்ததாகவும் தெரிகிறது. இதனால் அனிதாவின் உடல்நிலை மேலும் மோசமானது. சையத் முசீர் இரும்பால் குத்தியதில் ஏற்பட்ட காயத்தால் வலி தாங்க முடியாமல் அனிதா துடிதுடித்து வந்தார். அதைத்தொடர்ந்து, மண்டியாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.
கைது
அப்போது பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணிடம் தனக்கு நடந்த கொடூரம் பற்றி அனிதா கூறி கதறி அழுதாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், டாக்டரிடமும், அனிதாவின் தாயாரிடமும் தெரிவித்தார். இதையடுத்து, அனிதாவை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ராமநகர் டவுன் போலீசில் சையத் முசீர் மீது புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சையத் முசீரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ராமநகர் மற்றும் மண்டியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment