Wednesday, 11 June 2014

மது குடித்து விட்டு போதையில் கிடந்தவரை காட்டு பன்றிகள் கடித்து குதறியது

மது குடித்து விட்டு போதையில் மயங்கி கிடந்தவரை காட்டு பன்றிகள் கடித்து குதறியது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது சிக்கரசம் பாளையம். சத்தி வனப் பகுதியையொட்டி உள்ள இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாரண்ணன் (வயது 45). 

கூலி தொழிலாளியான இவர் மாலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது குடித்தார். மது அதிகமாக குடித்ததால் போதையில் கடை அருகேயே மயங்கி விழுந்து விட்டார். இதை பார்த்த மற்ற 'குடி' மகன்களும் மேலும் அந்த வழியாக சென்றவர்களும் போதை தெளிந்ததும் எழுந்து சென்று விடுவார் என கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர்.
இதனால் நள்ளிரவில் வரை அங்கேயே போதையில் சுருண்டு கிடந்தார். அப்பகுதி வனப்பகுதியையொட்டி உள்ளதால் வனத்தில் இருந்து 3 காட்டுப்பன்றிகள் அவர் மயங்கி கிடந்த இடத்துக்கு வந்தன.
பிறகு 3 காட்டு பன்றிகளும் கடும் ஆக்ரோஷமாக மாரண்ணன் மீது பாய்ந்து விழுந்து கடித்து குதறின.
இதனால் வலி பொறுக்க முடியாமல் மாரண்ணன் உடம்பில் இருந்து ரத்தம் வழிய... வழிய... அலறினார். காட்டு பன்றிகளை விரட்ட போராடினார். எனினும் காட்டு பன்றிகள் அவரை மேலும் கடித்து குதறின.
நள்ளிரவு என்பதால் ஆட்கள் நடமாட்டமும் அங்கு கிடையாது. தன்னந் தனியாக மாட்டி கொண்ட மாரண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பிறகு காட்டு பன்றிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன. காலையில் அந்த வழியாக வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் மாரண்ணன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
காட்டு பன்றிகள் குதறி பலியான மாரண்ணன் உடலை பார்த்து அவரது மனைவியும் ஒரேயொரு மகனும் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது.

No comments:

Post a Comment