Wednesday, 11 June 2014

: கள்ளக்காதலனுடன் பயணித்த மனைவிக்கு ஓடும் ரெயிலில் கொடுவாள் வெட்டு





3 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பயணித்த மனைவியை ஓடும் ரெயிலில் அரசு பஸ் டிரைவரான கணவர் கொடுவாளால் வெட்டினார்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பூபதி(வயது40). இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா(34). திருமணம் ஆகி சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வனிதாவுக்கு தனது உறவினரான வடிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தி, கள்ளக்காதலை ஏற்படுத்தியது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வனிதாவின் கணவருக்கு தெரியவந்தது. அதை தனது கள்ளக்காதலன் வடிவேலுவிடம் வனிதா தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இருவரும் ஊரைவிட்டு ஓட்டம் பிடிப்பது என முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு வனிதா, தனது 3 குழந்தைகளையும் தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அரசு பஸ் டிரைவரான பூபதி, தனது 3 குழந்தைகளையும் தவிக்க விட்டு, விட்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓடி விட்டாளே என்ற ஆத்திரத்திலும், வேதனையிலும் நிலை குலைந்து போனார்.

இதைத்தொடர்ந்து மனைவி வனிதா, கள்ளக்காதலனுடன் எங்கே பதுங்கி இருக்கிறாள்? என்று பூபதி பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் இருவரையும் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால், பூபதி சரிவர வேலைக்கு செல்லாமலும், தூக்கம் இல்லாமலும் ஒருவித குழப்பத்திலே சிக்கி தவித்து வந்தார். 3 குழந்தைகளையும் கவனித்து கொள்வதிலும் பெரும் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில், பூபதிக்கு அதிகாலை ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, வனிதா கள்ளக்காதலன் வடிவேலுவை திருமணம் செய்து கொண்டதாகவும், ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரும் பயணிகள் ரெயிலில் இருவரும் ஈரோடு நோக்கி திரும்பி வருவதாகவும் தகவல் வந்தது.

அதை அறிந்த பூபதி, ஈரோட்டிற்கு இருவரும் வரும் முன்பே, வழியிலேயே மடக்கி வனிதாவை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையிலேயே பூபதி, கையில் கொடுவாள் ஒன்றை மறைத்தபடி சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்தார். அங்கு உள்ள 3–வது பிளாட்பாரத்தில் காலை 8¼ மணிக்கு ரெயில் வந்தது. ரெயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றதும், அவசரம் அவசரமாக ஒவ்வொரு பெட்டியாக ஏறிய பூபதி, அங்கு மனைவி வனிதா இருக்கிறாளா? என தேடி பார்த்தார். அப்போது ஒரு பெட்டியில் கள்ளக்காதலன் வடிவேலு மடியில் படுத்த நிலையில் வனிதா இருந்தார். அதைப்பார்த்த பூபதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதலில் ஆத்திரத்தில் கத்தினார். அதைத்தொடர்ந்து வனிதாவுக்கும், பூபதிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இவர்களது வாக்குவாதத்தை ரெயிலில் பயணித்த அனைவரும் வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

வாக்குவாதம் முற்றவே, பூபதி தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளை எடுத்து மனைவி வனிதாவை வெட்டிக்கொல்ல முயற்சித்தார். அதை தடுக்க முயற்சித்தபோது, வனிதாவின் வலது கையை கொடுவாள் வெட்டி காயப்படுத்தியது. கொடுவாளை கண்ட பயணிகள் பயத்தில் அலறி அடித்தபடி ரெயிலை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். அதேவேளையில் கள்ளக்காதலன் வடிவேலுவும் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தார்.

பயணிகள் ஓடுவதை, அங்கு பிளாட்பாரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் குறிப்பிட்ட ரெயில் பெட்டிக்கு விரைந்து சென்றனர். அங்கு கையில் கொடுவாளுடன் நின்று கொண்டிருந்த பூபதியை போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் கையில் வெட்டு காயத்துடன் துடித்து கொண்டிருந்த வனிதாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கைதான பூபதியிடம் போலீசார் விசாரித்தபோது, ‘‘கடந்த 15 நாட்களாக 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிச்சென்றதால் மனைவியை வெட்டிக்கொல்ல முயற்சித்தேன்‘‘ என்றார். தொடர்ந்து பூபதியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய கள்ளக்காதலன் வடிவேலுவையும் போலீசார் தேடிவருகிறார்கள். சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் பயணிகள் மத்தியில் கள்ளக்காதலனுடன் பயணித்த மனைவியை, கொடுவாளால் கணவர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment