Thursday, 12 June 2014

மருத்துவக்கல்வி பயில இடம் கிடைக்காததால் ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை




பெங்களூர், 
மருத்துவக்கல்வி பயில இடம் கிடைக்காததால் வேதனை அடைந்த கல்லூரி மாணவி ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
மாணவி வினிதா
பெங்களூர் பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மகள் வினிதா(வயது 18). சம்பவத்தன்று பெங்களூரில் நடந்த மருத்துவக்கல்வி படிப்புக்கான கலந்தாய்வு கூட்டத்தில், வினிதா தனது தந்தை நந்தகுமாருடன் வந்து கலந்து கொண்டார்.
அப்போது வினிதாவுக்கு மருத்துவக்கல்வி பயில வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் வினிதா மனவேதனை அடைந்தார். அவருக்கு தந்தை நந்தகுமார் ஆறுதல் கூறினார்.
தற்கொலை
இந்த நிலையில், தனது தந்தையுடன் வீட்டுக்கு திரும்பிய வினிதா அன்று முழுவதும் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல இடங்களில் வினிதாவை தேடி பார்த்தனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் வினிதாவின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வினிதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மல்லேசுவரம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் காணாமல் போனதாக தேடப்பட்ட வினிதா என்பது தெரியவந்தது. மருத்துவக்கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்காததால் வேதனை அடைந்து அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லேசுவரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, மாணவி வினிதாவின் உடல் விக்டோரியா ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

No comments:

Post a Comment