வளர்ந்து வரும் மொபைல் தொழில்நுட்பம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வாட்ஸ்ஆப் தொழில்நுட்பத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது. ஆபத்து காலங்களில் இதன் மூலம் புகைப்படத்தை அனுப்பி உரிய நேரத்தில் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதற்கு பெங்களூரில் நடந்த சம்பவத்தை உதாரணமாக கூறலாம்.
பெங்களூரில் வேலை பார்த்து வரும் கவுரவ் அரோரா மற்றும் பிரியங் சர்மா ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை நகருக்கு அருகில் உள்ள மதுகிரி மலையில் ஏறினர். அப்போது சோர்வடைந்த பிரியங் மலையேற்றத்தை கைவிட்டு நின்றுவிட்டார். கவுரவ் தொடர்ந்து ஏறினார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் கவலையடைந்த பிரியங், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
5 மணி நேரத்திற்குப் பிறகு கவுரவ் தனது மொபைலில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் புகைப்படத்தை அனுப்பினார். மலையில் இருந்து சறுக்கி விழுந்த அவர் எங்கு சிக்கியிருக்கிறார் என்ற விவரம் அந்த படத்தின்மூலம் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்குச் விரைவாகச் சென்று கவுரவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை தேறி வருகிறது.
கவுரவை உரிய நேரத்தில் மீட்பதற்கு தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருந்ததாக கூறிய மூத்த போலீஸ் அதிகாரி உசைன், அதிகாலை 2 மணிக்கு சம்பவம் நடந்தாலும் தங்களால் அவரை தேடி கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment