Wednesday, 11 June 2014

மம்தாவுக்கு பிடித்த நிறத்தில் வீட்டுக்கு'பெயின்ட்' அடித்தால் வரி சலுகை


கோல்கட்டா:'மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜிக்கு பிடித்த நிறத்தில், வீட்டுக்கு பெயின்ட் அடித்தால், ஒரு ஆண்டுக்கு சொத்து வரி தள்ளுபடி செய்யப்படும்' என, கோல்கட்டா மாநகராட்சி அறிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள கோல்கட்டா மாநகராட்சி நிர்வாகம், திரிணமுல் காங்., வசம் உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த சோவன் சட்டர்ஜி, மேயராக உள்ளார்.சில மாதங்களுக்கு முன், கோல்கட்டா வில், அரசு அலுவலகம் ஒன்றை திறந்து வைத்தார், முதல்வர் மம்தா பானர்ஜி. அந்தகட்டடத்துக்கு, முதல்வருக்கு மிகவும் பிடித்த வெள்ளை மற்றும் நீல நிறங்களில் பெயின்ட் அடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பேசிய மம்தா, 'நீலம் மற்றும் வெள்ளை நிறங்களை பார்க்கும்போது, மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கோல்கட்டா முழுவதும், இதுபோன்ற நிறம் இருந்தால், நன்றாக இருக்கும்' என்றார்.இதையடுத்து, கோல்கட்டா மாநகராட்சியில், அதிரடியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்,'கோல்கட்டாவில் வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், அலுவலகங்களுக்கு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் பெயின்ட் அடித்தால், அந்த கட்டடங்களுக்கு ஒரு ஆண்டுக்கு, சொத்து வரி வசூலிக்கப்படாது' என, கூறப்பட்டுள்ளது.இந்த தீர்மானம், மேற்கு வங்க மாநில அமைச்சரவை ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோல்கட்டா மாநகராட்சியின் இந்த தீர்மானம், பொது மக்களிடமும், எதிர்க்கட்சிகளிடமும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment