நெல்லை : மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரம் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த மாணவர்களுக்கு 25 சதவீத சேர்க்கை வழங்க வேண்டும் என்ற நியதி கடந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிலும் சிறுபான்மையினர் அல்லாத அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்களை சேர்க்கும் பணியை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரம் குறித்து பள்ளி முன் அறிவிப்பு வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 25 சதவீத மாணவர் சேர்க்கை திட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் முடிந்த நிலையில் ஒரு சில பள்ளிகளில் அந்த இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. மேலும் சில பள்ளிகளில் எங்களிடம் சேர்வதற்கு அந்த தகுதி உள்ள மாணவர்கள் வரவில்லை என கல்வித் துறையினரிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்க்கை தேதியை இம்மாத இறுதி (ஜூன் 30ம் தேதி) வரை கல்வித்துறை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் முழுமையாக ஏழை மாணவர்கள் சேர்க்கப்படாத பள்ளிகள் குறித்த விபரங்கள் கணக்கு எடுக்க கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment