Wednesday, 3 July 2013

அமீரகத்தில்உள்ள கைதிகளை விடுவிக்க உதவிய இந்திய தொழிலதிபர்

அமீரகத்தில்(UAE)  உள்ள 3700 கைதிகளை விடுவிக்க உதவிய தங்கமான இந்திய தொழிலதிபர்
துபாய் : ஐக்கிய அரபு அமீரக சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த 3700 சிறைக்கைதிகளை இந்திய தொழிலதிபர் ஒருவர் விடுவித்திருப்பது தெரியவந்துள்ளது.
2011-ஆம் ஆண்டிலிருந்து சிறைவாசிகளை விடுவிக்கும் பணியைச் செய்து வரும் பிரோஸ் மெர்சண்ட் எனும் தொழிலதிபர் இது வரை விடுவிக்க உதவிய 3700 கைதிகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், மொராக்கோ, எத்தியோப்பியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.

பொருளாதர நெருக்கடியின் போது வேலை இழந்த பலர் தங்கள் கடன்களை அடைக்க முடியாமல் திண்டாடியதை பார்த்து உந்தப்பட்டே தாம் இப்பணியைச் செய்வதாகச் சொல்லும் பிரோஸ் தாம் கொலை, கொள்ளை, வன்புணர்வு போன்றவற்றில் ஈடுபடும் குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு உதவவில்லை என்று கூறினார்.

வீட்டு வாடகை, வாகனக் கடன், கல்வி கடன், கடன் அட்டை போன்றவற்றிக்கு பணம் கட்ட முடியாததால் சிறையில் அடைபடும் பலர் தங்கள் சிறைகாலத்தை கழித்த பின்னும் பணம் இல்லாததால் வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் கடன் தொகையை கட்டி அவர்களின் அபராதத்  தொகையும் செலுத்தி பிரோஸ் அவர்களை விடுவித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டும் மேலும் 1000 கைதிகளை விடுவிக்க உள்ளதாகச் சொல்லும் பிரோஸ் அமீரக சிறைச்சாலைகளில் நல்ல உணவும், இருப்பிடமும், கல்வி கற்க வாய்ப்பும், குளிர் சாதன வசதியும் இருந்தாலும் அவை சிறைச்சாலைகளே, அவர்களின் குடும்பத்தினருடன் கழிக்கும் நிம்மதியை தர முடியாது என்பதனாலேயே தாம் இப்பணியைச் செய்வதாகவும் கூறினார்.

1989ல் மும்பையிலிருந்து அமீரகம் வந்த பிரோஸ் தூய்மையான தங்கம் (Pure Gold) எனப்  பொருள்படும் தங்கக் கடையை வைத்துள்ளார். பெயருக்கு ஏற்றார் போல் பிரோஸும் தூய்மையான இதயம் உள்ளவர் தான்.

No comments:

Post a Comment