சாலை விபத்துகளில், நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ள நிலையில், விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள, போக்குவரத்து துறை தயாராகி வருகிறது. விபத்துகளை தடுக்க, சாலைகளில், வேகத் தடைகளை அமைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.
குற்ற ஆவண காப்பகம்: "கடந்த, 10 ஆண்டுகளில், அதிகளவில் சாலை விபத்து நடைபெற்ற மாநிலங்களில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது' என, தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.,) தெரிவித்துள்ளது. கடந்த, 2003ல், அதிகபட்சமாக, தமிழகத்தில், 51 ஆயிரம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன; 2012ல், 68 ஆயிரம் விபத்துகள் நடந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கு, எட்டு விபத்தும், நாள்தோறும் சராசரியாக, 44 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பெரும்பாலான சாலை சந்திப்புகள், கல்வி கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, வேகத் தடை இல்லாததால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. முக்கிய சாலைகளில் வேகத் தடைகளை அமைத்து, விபத்துகளை தடுக்க வேண்டியது அவசியம். ஆனால், ஏற்கனவே அமைக்கப்பட்ட ரப்பராலான வேகத் தடை அனைத்தும், கூடுதல் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில், சேதமடைந்து கிடக்கின்றன.
65 கோடி:
சாலை பாதுகாப்பு பணியை மேற்கொள்ள, 2012 -13ம் நிதியாண்டில், 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இத்தொகை சில மாதங்களுக்கு முன் தான், போக்குவரத்து துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. இதில், 200 ரப்பர் வேகத் தடைகளை அமைக்க, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விபத்துகளை குறைக்க தேவையான தகவல்களை தயாரிக்கும்படி, மாவட்ட கலெக்டர் தலைமையிலான, சாலை பாதுகாப்பு குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். எந்தெந்த முக்கிய சாலைகளில் வேகத் தடைகள் அமைப்பது என, ஆய்வு நடைபெற்று வருகிறது. மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட, கிராமப்புற சாலைகளில் தேவையான இடங்களில் வேகத் தடைகளை, மூன்று மாத காலத்திற்குள் அமைத்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment