Wednesday, 3 July 2013

கணவருடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை: தர்மபுரி கலவரத்துக்கு காரனமான பெண் திட்டவட்டம்


சென்னை: தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவை ஆஜர்படுத்தக் கோரிய மனுவை, வாபஸ் பெறுவதாக, அவர் தாய் தரப்பில், சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனு மீதான உத்தரவை, இம்மாதம், 5ம் தேதிக்கு, ஐகோர்ட் தள்ளி வைத்தது. இதற்கிடையில், "கணவருடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை' என, திவ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், கலப்பு திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், பெண்ணின் தாய் தேன்மொழி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு: என் மகள், திவ்யாவை கடத்திச் சென்று, 21 வயது நிரம்பாதவருடன், திருமணம் செய்து வைத்தனர். போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. என் கணவர், கடந்த ஆண்டு, நவம்பரில், தற்கொலை செய்து கொண்டார். என் மகளை, வலுக்கட்டாயமாக, சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர். அவரை, கண்டுபிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள் ஜெய்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. திவ்யாவிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். தாயாருடன் செல்ல, திவ்யா விருப்பம் தெரிவித்தார். இவ்வழக்கு, "டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாய் தேன்மொழி சார்பில், வழக்கறிஞர் ரூபர்ட் பர்னபாஸ் ஆஜராகி, ""ஆட்கொணர்வு மனுவை, வாபஸ் பெறுகிறோம். இதில், மேற்கொண்டு விசாரணை தேவையில்லை. மனு தாக்கல் செய்தவர், வாபஸ் பெறுவதாக கையெழுத்திடுவார்,'' என்றார். இதற்கு, வாலிபர் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் சங்கரசுப்பு, ""அரசியல் தலைவரின் நிர்ப்பந்தத்துக்கு, மனுதாரர் ஆளாகியுள்ளார். திவ்யாவுக்கு, கவுன்சிலிங் அளிக்க உத்தரவிட வேண்டும். அறிவியல் பூர்வ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்,'' என்றார். நீதிபதிகளும், "அந்தப் பெண்ணிடம் விசாரித்து விட்டோம். வேண்டுமென்றால், இங்கேயும் விசாரிக்கிறோம். இதற்கு மேல், ஆட்கொணர்வு மனுவில், ஒன்றுமில்லை. அந்தப் பெண்ணின் மனதில் மாற்றம் ஏற்பட்டால், அப்போது நீங்கள் (வாலிபர் தரப்பில்) மனுத் தாக்கல் செய்யுங்கள். நாங்கள் விசாரிக்கிறோம்' என்றனர்.எழுத்துபூர்வ வாதத்தையும், தீர்ப்புகளையும் தாக்கல் செய்வதாக, வழக்கறிஞர் சங்கரசுப்பு தெரிவித்தார். இதையடுத்து, இவ்வழக்கில், உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, இம்மாதம், 5ம் தேதிக்கு, "டிவிஷன் பெஞ்ச்' தள்ளி வைத்தது.

"சேர்ந்து வாழ தயாராக இல்லை':

கோர்ட்டுக்கு, திவ்யாவும் வந்திருந்தார். விசாரணைக்குப் பின், நிருபர்களிடம் திவ்யா கூறியதாவது: முதலில், விரும்பி தான் திருமணம் செய்தேன். பின், அப்பா இறப்பு, ஊரில் ஏற்பட்ட பாதிப்பால், ஏற்பட்ட கஷ்டம் மட்டுமே, என் நினைவில் இருக்கிறது. என்னால், அவருடன் சேர்ந்து வாழ முடியாது. அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை, எண்ணம் தோன்றவில்லை. அங்கு இருந்த சூழ்நிலையால், அதை மீறி என்னால் வர முடியவில்லை. அதனால் தான், இவ்வளவு நேரம் ஆனது. எந்த சூழ்நிலையிலும், அவரோடு சேர்ந்து வாழ தயாராக இல்லை. அம்மா உடன் இருப்பேன். என் அப்பா இடத்தை, முடிந்த வரை ஈடு செய்வேன். நடந்தது தப்பு என, உணர்ந்து வந்து விட்டேன். இவ்வாறு, திவ்யா கூறினார். வழக்கறிஞர் கே.பாலு கூறும் போது, ""மகள் தன்னோடு வந்து விட்டதால், மேற்கொண்டு வழக்கை நடத்த விரும்பவில்லை என, திவ்யாவின் தாய், எழுதி கொடுத்துள்ளார்,'' என்றார்.

No comments:

Post a Comment