பாட்னா: பீகாரில், பக்கத்து வீட்டுக்காரர்களால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, பஞ்சாயத்தார் உத்தரவிட்ட, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சி:
பீகார் மாநிலம், முஜாபர்பூர் மாவட்டத்தில் உள்ளது, ரஜ்வாடா என்ற சிறிய கிராமம். இங்கு வசிக்கும் இளம் பெண்ணை, அவரின் பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிலர், சமீபத்தில், பாலியல் பலாத்காரம் செய்து, பின், தப்பி ஓடி விட்டனர். வெளியில் சென்றிருந்த, அந்த இளம் பெண்ணின் தாய், வீடு திரும்பியதும், தன் மகள், கிடந்த கோலத்தை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். நடந்த விபரீதத்தை, அந்த இளம் பெண், தன் தாயிடம் கூறினார். உடனடியாக, அவர்கள் போலீசில் புகார் கொடுக்கச் சென்றனர். ஆனால், அந்த கிராமத்தின் பஞ்சாயத்தார், அவர்களை தடுத்து நிறுத்தினர். 'நீதி வழங்குவதற்கு, நாங்கள் இருக்கும்போது, எதற்கு போலீசார் உதவியை நாடுகிறீர்கள்?' எனக் கூறி, பஞ்சாயத்தை கூட்டினர்.
மூடி மறைப்பதில் ஆர்வம்:
இதில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், 10 ஆயிரம் ரூபாய், இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்றும், இளம் பெண் தரப்பினர், போலீசில் புகார் செய்யக் கூடாது என்றும், விசித்திரமான முடிவெடுக்கப்பட்டது. நடந்த துயர சம்ப வத்தை, மூடி மறைப்பதிலும், பஞ்சாயத்தார், ஆர்வமாக இருந்தனர். இந்த சம்பவம், எப்படியோ, போலீசாருக்கு தெரிந்து விட்டது. இளம் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் பெண்ணின், கற்புக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு நிர்ணயித்த, பஞ்சாயத்து நிர்வாகம் குறித்து, பீகாரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர்கள், பெண்கள் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
No comments:
Post a Comment