1.35 பில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ள சீனாவில் 300 மில்லியனுக்கும் மேற்பட்டோர் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். உள்நாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்ய இதுவரை தேசிய அளவிலான சட்டம் எதுவும் இல்லை.
கடந்த 2011 ஆம் ஆண்டில் ஓட்டல்களிலும், உணவகங்களிலும் புகை பிடிக்கக்கூடாது என்ற விதிமுறையை சீன அரசு கொண்டுவந்தது. ஆனால் இந்த சட்டம் கடுமையாகப் பின்பற்றப்படவில்லை. அரசுக்கு சொந்தமான புகையிலை நிறுவனங்களிலிருந்து வரும் ஏராளமான வருவாய் இத்தகைய விதிமுறைகளை செயல்படுத்த விடாமல் தடுப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
சமீப காலங்களில் புகை பிடிப்போரின் இறப்புவிகிதம் 1.4 மில்லியனாகக் காணப்படுவது சீனா எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சுகாதார சவாலாகும். 10 வருடங்களுக்கு முன்னால் இருந்ததைவிட அந்நாட்டில் சிகரெட் விற்பனை 50 சதவிகிதம் உயர்ந்து 2.52 டிரில்லியன் விற்பனை அளவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் எடுக்கப்பட்டுள்ள இந்தக் கணக்கீடு சீனாவின் புகையிலை கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்டதாகும்.
தற்போது சிகரெட் பிடிப்போரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையாக சீன அரசு மீண்டும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு இடங்கள், பொது போக்குவரத்து மற்றும் புகை பிடிப்பது தடை செய்யப்பட்ட இடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் புகை பிடிக்கக்கூடாது.
அரசுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போதும் அவர்கள் புகை பிடிக்கவோ மற்றவர்கள் புகை பிடிப்பதற்கு சிகரெட் அளிக்கவோ கூடாது. பொது பணத்திலும் அவர்கள் சிகரெட்டுகள் வாங்கக்கூடாது, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலோ, அரசு அலுவலகங்களிலோ புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படவோ, விளம்பரம் செய்யப்படவோ கூடாது போன்ற விதிமுறைகளை நேற்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மற்றும் சீனாவின் அமைச்சரவை இணைந்து ஒரு சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.
புகை பிடிக்கும் பழக்கம் உலகளவில் எல்லா பொது இடங்களிலும் காணப்படுகின்றது. சில அதிகாரிகள் பொது இடங்களில் புகைபிடிப்பது சுற்றுப்புறச் சூழலையும், பொது சுகாதாரத்தையும் பாதிப்பதாக மட்டுமில்லாமல் கட்சியின் செல்வாக்கையும் பாதிப்பதாக இருக்கின்றது.
அதிகாரிகளின் இத்தகைய தவறான பழக்கங்களால் அரசு அலுவலகங்கள் மற்றும் தலைவர்களைப் பற்றி மக்களிடையே எதிர்மறையான எண்ணங்களே தோன்றுகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment