லக்னோ:உத்தர பிரதேசத்தில், பெற்றோர் அனுமதியில்லாமல், ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிக்கு, போலீசாரே திருமணம் செய்து வைக்கின்றனர்.அதற்கு, போலீசார் முன்வைக்கும் ஒரே நிபந்தனை, பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஆண், அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில், 50 ஆயிரம் ரூபாய், 'டெபாசிட்' செய்ய வேண்டும் என்பது மட்டும் தான்.
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யில் காதல் திருமணங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, போலீசாரும் ஆதரவாக உள்ளனர்.மாநில, டி.ஜி.பி., தேவ்ராஜ் நாகர், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சில நாட்களுக்கு முன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும், காதல் ஜோடிகளை தடுக்க வேண்டாம். மாறாக, அந்தப் பெண்ணின், வங்கிக்கணக்கில், 50 ஆயிரம் ரூபாயை, டெபாசிட் செய்ய மட்டும் நிபந்தனை விதியுங்கள்' என, தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒரு காரணமும் உண்டு.சமீபத்தில், பெற்றோருக்கு தெரியாமல், ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி, திருமணமான, சில நாட்களிலேயே பிரிந்து விட்டது. ஏதோ காரணம் கூறி, அந்தப் பெண்ணை, நிராதரவாக விட்டுச் சென்ற கணவன், எங்கிருக்கிறான் என்பதே தெரியவில்லை.இது போன்ற சூழ்நிலையில், அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், காதல் திருமணத்திற்கு, '50 ஆயிரம் ரூபாய் நிபந்தனை' விதிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment