பீகார் முதல் மந்திரியாக பதவி வகித்த போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக பொய் கணக்கு காட்டி 950 கோடி ரூபாய் ஊழல் செய்த வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பீகார் மாநில முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக்கோரி லல்லு பிரசாத் யாதவ் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அவரது மனு சிபிஐ நீதிமன்றம் மற்றும் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.
எனவே, உச்சநீதிமன்றத்தில் லல்லு பிரசாத் யாதவ் ஜாமின் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜாமின் வழங்க உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு வந்ததையடுத்து லல்லு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் இருந்து கடந்த 16-ம் தேதி வெளியே வந்தார். அப்போது சிறை வாசலில் திரண்டிருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சிறையை விட்டு வெளியே வந்த லல்லு பிரசாத் யாதவ், நேற்று முன்தினம் ராஞ்சியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ராம்கர் என்ற இடத்தில் அமைந்துள்ள ராஜ்ரப்பா கோயிலுக்கு சென்றார்.
கோயிலுக்குள் நுழைந்த லல்லுவின் செருப்பை ஒரு போலீஸ் அதிகாரி பவ்யமாக கையில் எடுத்து வைத்துக் கொண்டதையும், வட்டார துணை போலீஸ் உயரதிகாரி ஒருவர் லல்லுவின் காலை கழுவ தண்ணீர் ஊற்றிய காட்சியையும் உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
No comments:
Post a Comment