குஜராத்தைச் சேர்ந்த இளம் பெண் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இளம் பெண் ஒருவரை வேவுபார்க்க வேண்டும் என்று குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அமீத் ஷா, ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்காலுக்கு உத்தரவிடுவதைப் போல உள்ள தொலைபேசி உரையாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தில்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பதிலளிக்கையில், "இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி வருகின்றன.
அவற்றை குடியரசுத் தலைவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு அனுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகம் இது குறித்து விரிவாக ஆய்வு நடத்தி வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும்' என்று ஷிண்டே கூறினார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவித்ததாவது:
"மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்புதான் விசாரணைக்கு உத்தரவிட முடியும். அந்த ஒப்புதல் கிடைத்தவுடன், நீதி விசாரணை நடத்த பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதியை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளும்' என்று தகவல்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment