இளம் வயது திருமணம், ஆதரவற்ற பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்குதல், தவறான உறவால் ஏற்படும் கர்ப்பம் போன்றவற்றால், கர்ப்பத்தில் வளரும் குழந்தையை, ஆபரேஷன் மூலம் எடுத்து, வீதியில் வீசும் அவலம், நாடு முழுவதும் உள்ளது. வீட்டுக்கு தெரியாமல் ஏமாற்றப்படும் பெண்கள், தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அவர்களிடம் பணத்தை கறக்கும் டாக்டர்கள், சிசுவை அழிப்பதோடு, அறுவை சிகிச்சை மூலம் எடுக்கும், குறைப்பிரசவ சிசுக்களை, குப்பையில் போடும் பாதகத்தை செய்வதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது.
பிற மாவட்டங்களை விட,சேலம் மாவட்டத்தில், சிசு கொலை அதிகம் நடந்து வருகிறது.சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, அங்கம்மாள் காலனி ஏரி பகுதியில், தொப்புள்கொடியுடன் சிசு உடல்களைக் கண்டெடுத்து, போலீசார் புதைத்தனர். இந்நிலையில், சேலம் அணைமேடு பகுதியில், திருமணிமுத்தாற்று படுகை யில், மருத்துவ கழிவு குப்பையுடன் கிடந்த, நான்கு சிசுக்களை போலீசார் கைப்பற்றினர். தனியார் மருத்துவ மனைகள் சில, இரவோடு, இரவாக சிசுக்களை குப்பையில் போட்டிருக்கலாம், என, கூறப்படுகிறது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:
சேலத்தில், குப்பையில் சிசுக்கள் கிடந்த தகவல், நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. அரசு மருத்துவமனைகளில், இது போல் நடந்திருக்க வாய்ப்பில்லை. சில தனியார் மருத்துவமனைகள் செய்திருக்கலாம். அந்த சிசுக்களின் தாய் யார் என, கண்டறிந்தால், நடவடிக்கை எடுக்கலாம். யார் என்றே தெரியாததால், போலீசார் தான் விசாரிக்க வேண்டும். நாங்களும் விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment