திண்டிவனம் : பெருகி வரும் டாஸ்மாக் கடைகளால் குடிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து பல்வேறு விபத்து, குற்றங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், குடிபோதையில் போலீஸ் நிலையத்திலேயே காரை கொண்டு 4 பேர் நிறுத்திச் சென்றனர். பின்னர், காரை காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டது. திண்டிவனத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் நகர போக்குவரத்து காவல் நிலையம் செயல்படுகிறது. சென்னை மற்றும் தென்மாவட்ட வாகனங்கள் அனைத்தும் இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் காவல்நிலைய வளாகத்துக்குள் ஒரு கார் திடீரென வந்து நின்றது. அதற்குள், 4 பேர் குடி போதையில் இருந்தனர். காரை பூட்டிவிட்டு இறங்கிய அவர்கள் 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.இதற்கிடையே, அந்த காரின் உரிமையாளர் ஆனந்தகுமார் என்பவர், தனது காரை காணவில்லை என போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் தீவிரமாக காரை தேடியபோது, திண்டிவனம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நிற்பது தெரிய வந்தது. போதையில் இருந்த கார் டிரைவர் மற்றும் அவருடன் வந்த 3 பேரும் காரை எங்கு நிறுத்தினோம் என்பது தெரியாமல் சாவியை மட்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்துச் சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. காரை சோதனை போட்டபோது அதில் மதுபாட்டில்கள் கிடந்தன. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை பறிமுதல் செய்தனர். மேலும், போதையில் வந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் போலீஸ் நிலையத்திலேயே குடிமகன்கள் காரை நிறுத்திவிட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment