ரஷ்ய தயாரிப்பான சோயூஸ் ராக்கெட் மூலம் 100 கோடி டாலர் மதிப்பிலான கையா செயற்கைக் கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் பால்வீதி மண்டலத்தில் உள்ள கோடிக்கணக்கான விண்மீன்களைக் கணக்கெடுத்து முப்பரிமாண வடிவிலான வரைபடமாகத் தயாரிக்க உதவப் போகிறது.
மிக சக்திவாய்ந்த 1000 மெகா பிக்சல் கேமிராவுடன் இயங்கும் இதன் தொலைநோக்கியானது அண்டவெளியில் உள்ள 100 கோடி நட்சத்திரங்களை பற்றி ஆராயவும், அவைபற்றிய முப்பரிமாண புகைப்படங்களை எடுத்து அனுப்பும். மூன்றுவார பயணத்திற்கு பிறகு சுமார் 15 லட்சம் மைல்களுக்கு அப்பால் இந்த தொலைநோக்கி சென்றுவிடும்.
அப்போது அதன் பார்வையிலிருந்து பூமி மறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் தூரம், வேகம், இயக்கம், திசை பற்றிய தகவல்களை துல்லியமாக அளிக்கும். 5 வருட காலம் அண்டவெளியில் சுற்றி ஆராயும் இந்த தொலைநோக்கி 50 ஆயிரம் கோள்கள் பற்றிய தகவல்களை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அண்டவெளியில் நிகழும் அரிய நிகழ்வான நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவது, புதிய நட்சத்திரங்கள் உருவாவது தொடர்பான புகைப்படங்களையும் இந்தத் தொலைநோக்கி அனுப்பும். செயற்கைக் கோளில் உள்ள பிற உபகரணங்களை இயக்குவதற்கான சக்தியைத் தயாரிப்பதற்காக இந்தச் செயற்கைக்கோளில் சூரியசக்தித் தகடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்காகவே, சூரியனை பூமி மறைக்காத வகையிலான எல் 2 (லி2) வட்டப்பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கையாவில் உள்ள உபகரணங்களைக் பாதுகாப்பதற்காக சூரி ஒளி மறைப்புத் தகடுகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கையா அனுப்பும் தகவல்களின் அடிப்படையில் 2020-ம் ஆண்டு சுமார் நூறு கோடி விண்மீன்களைக் கொண்ட முப்பரிமாண வரைபடம் வெளியிடப்படும். எனினும் இந்த வரைபடத்தில் இருக்கப்போவது பால்வீதி மண்டலத்தில் உள்ள வெறும் ஒரு சதவீத விண்மீன்கள்தானாம்.
No comments:
Post a Comment