லக்னோ: உ.பி.,யில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை, அம்மாநில அரசு, கட்டாயப்படுத்தி வெளியேற்றி வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், போலீசார் வெளியேற்றுவதால், அவர்கள், கவலையடைந்துள்ளனர்.
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, முசாபர் நகர் மாவட்டத்தில், சில மாதங்களுக்கு முன், இரு தரப்பினருக்கு இடையே, கலவரம் ஏற்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; ஏராளமான வீடுகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தால் பாதிக்கப்பட்டோர், பல்வேறு இடங்களில், நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர். கலவரம் ஓய்ந்து, தற்போது இயல்பு நிலை திரும்பியதால், முகாம்களில் தங்கியிருந்த பலர், தங்களின் வீடுகளுக்கு திரும்பினர். உயிர் பயம் காரணமாக, பலர், தொடர்ந்து முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், காங்., துணைத் தலைவர் ராகுல், சமீபத்தில் இந்த முகாம்களுக்கு சென்றார். பின், 'முகாம்களில் மாநில அரசு, போதிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவில்லை' என, பேட்டி அளித்தார். இதற்கு பதிலடியாக, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், 'தற்போது முகாம்களில் தங்கியுள்ளவர்கள், காங்., - பா.ஜ., கட்சியினரின் ஆதரவாளர்கள். மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகத் தான், தொடர்ந்து, முகாம்களில், அவர்கள் தங்கியுள்ளனர்' என்றார். இதற்கு, அனைத்து தரப்பினரும், கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நிவாரண முகாம்களில் தங்கியிருந்தோரை, போலீசார், நேற்று முதல், வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். உ.பி.,யில், தற்போது கடும் குளிர் அடிக்கிறது. அதை பொருட்படுத்தாமல், முகாம்களில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் தங்கியுள்ள பிரவீண் என்பவர் கூறுகையில், ''கடும் குளிரில், எங்களை வெளியேற்றினால், குழந்தைகளுடன், நாங்கள், எங்கே போவோம்,'' என்றார். உ.பி., மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு, எதிர்க்கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
No comments:
Post a Comment