Tuesday, 24 December 2013

சிறுபான்மையினப் பிரதிநிதிகளுடன் ராகுல் ஆலோசனை



தில்லியில் சிறுபான்மையினர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தயாரிக்கும் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் இடம்பெறும் என்று அவர்களிடம் உறுதியளித்தார்.
தில்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்திவருகிறார்.
இந் நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிக்கான முன்னேற்பாடுகளை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது குறித்தும் ராகுல் காந்தி  பரிசீலித்து வருகிறார்.
இதன்படி கடந்த 13-ஆம் தேதி அவர் தாழ்த்தப்பட்டோர், பிற பிற்படுத்தப்பட்டோர் வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக தில்லியில் சிறுபான்மை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மத்திய சிறுபான்மையினர்  விவகாரங்கள் துறை அமைச்சர் ரகுமான் கான், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ், தில்லி முன்னாள் அமைச்சர் ஹாரூண் யூசுஃப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் 100 அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இப் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அரசிடமிருந்து எதிர்பார்க்கும் தேவைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.
அவர்களிடையே ராகுல் காந்தி பேசியது:
"இந்தியா மதச்சார்பற்ற நாடு. மதத்தின் பெயராலோ ஜாதியின் பெயராலோ எந்த ஒரு தனி நபரும் ஒடுக்கப்படவோ, அச்சுறுத்தலுக்கு ஆளாகவோ கூடாது. இந்த வகை அச்சுறுத்தலை விளைவிப்போருக்கு எதிராக நாம் போராட வேண்டும். இதற்கான முயற்சியை காங்கிரஸ் எடுத்துள்ளது. சமூகத்தின் நலிவடைந்த, ஏழ்மை நிலையில் உள்ள வகுப்பினரை மேம்படுத்த அவர்களுக்குத் தரமான கல்வி போதிக்கப்பட வேண்டும்.
தனி மனித உரிமை, மதிப்பு, அவர்களின் குரல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டும். அதை உறுதி செய்வதுதான் நல்லாட்சியின் அடையாளம். அதை உறுதிப்படுத்தக் கூடிய திட்டங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்' என்றார் ராகுல் காந்தி

No comments:

Post a Comment