சீனாவின் தென்பகுதி நகரமான ஷென்செனில் செயல்பட்டு வரும் பையோகங்டாய் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் மஞ்சள் காமாலையைத் தடுக்கும் ஹெபடைடிஸ்-பி என்ற மருந்தைத் தயாரித்து அரசு தடுப்பூசித் திட்டங்களுக்கு அளித்து வருகின்றது. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த அரசுத் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் 6 குழந்தைகள் இறக்க நேரிட்டது அதிகாரிகளிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஒரு குழந்தையின் இறப்புக்கு வேறு காரணங்கள் உறுதி செய்யப்பட்டபோதும் மற்ற குழந்தைகளின் இறப்பிற்குக் காரணம் கண்டறிய முடியாமல் இருந்தது. தங்களின் மருந்தின் தரத்தின் மீது நம்பிக்கை தெரிவித்த அந்நிறுவனமோ, ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியை அளித்ததும் அந்த நோய் தீவிரமாக வெளிப்பட்டிருக்கக்கூடும் என்று வாதிட்டது. குழந்தைகளின் இறப்புகள் தற்செயலாக நடந்தவை என்றும் தடுப்பூசியுடன் இந்த மரணங்களை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்றும் நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்த மரணங்கள் தற்செயலாக இருந்தால்கூட அதனை அந்த நிறுவனத்தால் நிரூபிக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சகம், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த மருந்தினை அரசு முகாம்களில் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. இதுகுறித்த விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கையை நாம் ஒரு முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் தங்களுடைய சுயநலன்களைப் பாதுகாக்க முயற்சி செய்யலாம். அல்லது அவர்களது தயாரிப்பின் மீது அவர்களுக்கு அதீத நம்பிக்கை இருக்கக்கூடும் என்று சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோய் தடுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் செங் குவாங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment