Thursday, 19 December 2013

பள்ளி ஆசிரியை துண்டு துண்டாக வெட்டி படுகொலை



சென்னை: சென்னை அருகே பள்ளி ஆசிரியை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலின் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக அவரது கணவன் கைது செய்யப்பட்டார்.சென்னை அடுத்த சோழவரம் அருகேயுள்ள காரனோடை பஜார் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (45). மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சீனியர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் அருணகிரிபுரம் 3வது தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகள் காந்திமதிக்கும் (41) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.காந்திமதி திருவண்ணாமலை ஒன்றியம் சக்கரத்தாமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். பத்திரிகையில் விளம்பரம் செய்து, காந்திமதியை பரமசிவம் திருமணம் செய்துள்ளார்.இதையடுத்து திருவண்ணாமலை பகுதியில் இருந்து மாறுதலாகி கடந்த ஜூன் 11ம் தேதி சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் ஒன்றிய நடுநிலைப்பள் ளிக்கு ஆசிரியை வேலைக்கு வந்துள்ளார் காந்திமதி.

இந்நிலையில் நேற்று காலை பரமசிவத்தின் அக்கா அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டு கதவு பூட்டியிருந்தது. வீட்டின் உரிமையாளர் சையத் அமீனிடம் விசாரித்தபோது, அவர்கள் வெளியில் போயிருக்கலாம் என்று கூறியுள் ளார். அதற்கு உங்களிடம் உள்ள சாவியை கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் கடுமையான பிண நாற்றம் வீசியது. அதிர்ச்சி அடைந்து வீடு முழுவதும் தேடியபோது, குளியலறையில் காந்திமதியின் கால்கள் மற்றும் தொப்புள் வரையான வயி ற்று பகுதி மட்டும் கிடந்தது.இதனால் திடுக்கிட்டுப்போன பரமசிவம் அக்கா சையத் அமீனிடம் கூற அவர்  உடனடியாக சோழவரம் போலீசுக்கு தகவல் கொடுத் தார். போலீசார் விரைந்து வந்தனர். அப்போது பரமசிவம் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஒரு கை, மார்பின் ஒரு பகுதி செங்காலம்மன் கோயில் எதிரில் உள்ள செம்புலியாவரம் முள்புதரில் போடப்பட்டிருப்பது தெரிய வந்து. அங்கு சென்று உடலின் அந்த பகுதியை போலீசார் கைப்பற்றினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: பரமசிவம், காந்திமதி இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர், பரமசிவத்தின் சின்ன அக்காவுக்கு போன் செய்து உங்கள் தம்பி என்னை அடித்து சித்ரவதை செய்கிறார், உடனே வாருங்கள் என்று அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவம், ஏன் என் அக்காவிடம் சொல்கிறாய்? என்று கேட்டு காந்திமதியை பிடித்து சுவரில் தள்ளியுள்ளார். இதில் தலையில் பலமாக  அடிபட்டு சம்பவ இடத்திலேயே காந்திமதி ரத்தவெள்ளத்தில் சுருண்டுவிழுந்து இறந்துள்ளார். போதையில் இருந்து பரமசிவம் இரவில் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை யில் எழுந்தவர், அக்காவுக்கு போன் செய்து, காந்திமதி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதை நான் பார்த்துவிட்டேன். அதனால்தான் அவளை அடித்தேன். இதில் நீ தலையிடாதே, இங்கு வராதே என்று கூறியுள்ளார். 

பின்னர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்துவிட்டு பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். மனைவியின் உடலில் தீவைத்துள்ளார். புகை வீடு முழுவதும் பரவவே தீயை அணைத்து விட்டு காந்திமதியின் உடலை 3 துண்டாக வெட்டி ஆங்காங்கே போட்டுள்ளார்.  இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பரமசிவம் ஏற்கனவே சைகோ நிலையில் இருந்ததாக அவரது அக்கா மற்றும் உறவினர்கள் கூறியுள்ளனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி டிஎஸ்பி எட்வர்டு, இன்ஸ்பெக்டர்கள் சோழவரம் பாலு, மீஞ்சூர் சிங்காரவேலன், பொன்னேரி ரமேஷ் ஆகியோர் வந்து தீவிர விசாரணை நடத்தினர். பரமசிவத்தை கைது செய்தனர். தலை, மற்றொரு கை மற்றும்  மார்பு பகுதியை யானைக்கவுனி பகுதியில் போட்டுள்ளதாக பரமசிவம் கூறினார். இதனால் அவருடன் போலீசார் தலை பகுதியை தேடி சென்றனர்.யானைக்கவுனி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கால்வாய் கரையோரம் போடப்பட்டிருந்த காந்திமதியின் தலை, கை, மார்பு பகுதியை போலீசார் நேற்று மாலை கைப்பற்றினர். கால்கள், உடல், தலையை சாக்குமூட்டை யில் கட்டி பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.  கணவன் சைகோவானதால் கொலை நடந்ததா, அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தால் நெடுவரம்பாக்கம் பள்ளி க்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment