திருவனந்தபுரம்: கேரளாவில், மகன் திருடிய தங்க நகைகளை, தந்தை, திரும்ப கொடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய, இதய ஆபரேஷன் செலவுக்காக, நகைகளை, தன் மகன் திருடி விட்டதாக கூறி, அந்த தந்தை மன்னிப்பு கேட்டு, கடிதமும் எழுதியுள்ளார்.
கேரளாவின், திருவனந்தபுரம் அருகே, திருப்பாலூர் என்ற பகுதியில் வசிப்பவர், ராதாகிருஷ்ணன். சில நாட்களுக்கு முன், வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு, குடும்பத்துடன், சுவாமி கும்பிட சென்றிருந்தார். திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு, உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றதும், ராதாகிருஷ்ணனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 272 கிராம் தங்க நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள், அதை திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது; போலீசில் புகார் செய்தார். நான்கு நாட்களுக்கு பின், ராதா கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் எழுந்து, கதவை திறந்து பார்த்தபோது, கதவுக்கு அருகில், ஒரு பார்சல் இருந்தது. அதில், சில நாட்களுக்கு முன், காணாமல் போன, தங்க நகைகள் இருந்தன. அதில், ஒரு கடிதமும் இருந்தது.
அந்த கடித்தில் எழுதப்பட்டுஇருந்ததாவது: மன்னிக்கவும்; உங்கள் வீட்டில் இருந்த நகைகளை, என் மகன் தான், திருடினான். எனக்கு, இதய ஆபரேஷன் செய்வதற்கு, பணம் தேவைப்பட்டதால், இந்த காரியத்தை செய்து விட்டான். திருடிய பணத்தில், ஆபரேஷன் செய்வதற்கு, என் மனம் சம்மதிக்கவில்லை. இதனால், இந்த நகைகளை திரும்ப வைத்துள்ளேன். ஒரு சில, சிறிய நகைகளை மட்டும், இன்னும் சில நாட்களில், ஒப்படைப்பேன். இவ்வாறு, அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், பெயர், விவரம் எதுவும், அதில் இல்லை.
இதுகுறித்து, ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''இது, வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையாக இருந்தால், அவருக்கான, இதய ஆபரேஷன் செலவு முழுவதையும், நானே கொடுப்பேன்,'' என்றார். போலீசார் கூறுகையில், 'இந்த பகுதியில், இதய நோயாளிகள் யாராவது உள்ளனரா என, விசாரித்து வருகிறோம். கண்டுபிடித்தவுடன், இதுகுறித்து விசாரித்து, நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.
No comments:
Post a Comment