மும்பை கணவனை இழந்த பெண்ணுக்கு, வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை, அவர் மறுமணம் செய்து கொண்டார் என்பதற்காக, மறுக்க முடியாது என்று, மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மும்பையில், பிரபல கட்டுமான நிறுவனத்தில், வேலைபார்த்து வந்த சந்தீப் புராந்தரே, 2007ல், விபத்து ஒன்றில் பலியானார். இது தொடர்பான வழக்கு, விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் முன்
வந்தது. சில ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், சந்தீப்பின் மனைவி, மறுமணம் செய்து கொண்டதால், இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் மறுத்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படும், இழப்பீட்டை, சந்தீப்பின் குழந்தை பெயரில் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த, நீதிபதி, தர்மாதிகாரி தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த
உத்தரவில் கூறியுள்ளதாவது: விபத்தில், கணவரை இழந்த மனைவிக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து, குழந்தை பெற்ற நிலையில், கணவர் இறந்து விடுவதால், அந்த குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும், அப்பெண்ணுக்கு உள்ளது.எனவே, அவருக்கு இழப்பீடு தர வேண்டும். அவர் மறுமணம் செய்து கொண்டாலும், குழந்தையை பராமரிக்க வேண்டிய கடமை இருக்கிறது. எனவே, மறுமணம் செய்து கொண்டதை காரணம் காட்டி, அவருக்குரிய, இழப்பீட்டை மறுக்க முடியாது. மேலும், இந்த வழக்கில், உத்தரவிடப்பட்டுள்ள இழப்பீட்டு தொகை சரியாக கணக்கிடப்படவில்லை. இறந்து போனவர், உயிர் வாழும் காலத்தில், அவர் வருமான உயர்வு, சரியாக கணக்கிடப்படவில்லை. இதையும், கணக்கிட்டு, இழப்பீடாக, 67 லட்சம் ரூபாய், வட்டியுடன்
கணக்கிட்டு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையில், 20 சதவீதம், மனைவிக்கும், 60 சதவீதம்,
அவரது, 11 வயது குழந்தைக்கும், 20 சதவீதம், பலியானவரின் பெற்றோருக்கும் அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைக்கான இழப்பீட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், டிபாசிட் செய்து, கல்வி, அன்றாட செலவு, திருமணம் ஆகியவற்றிற்கு பயன்படும் வகையில் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment