திருப்பூர்: திருப்பூர், மங்கலம் அருகே, சுன்னத் ஜமாத் பள்ளியில், ஆறு வயது மாணவனுக்கு சூடு வைத்த ஆசிரியர், கைது செய்யப்பட்டார்.
திருப்பூரை சேர்ந்தவர் ஹக்கீம்; பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி யாஸ்மின். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதியர் ஓராண்டுக்கு முன் பிரிந்தனர். யாஸ்மின், தன் அண்ணன் ஜாகீர் உசேனுடன், கே.என்.பி., காலனியில் வசிக்கிறார். மூத்த மகனான, ஆறு வயது இப்ராகிமை, மங்கலம் அடுத்த அக்ஹரகாரப்புத்தூரில் உள்ள சுன்னத் ஜமாத், அரபி பள்ளியில் சேர்த்தார். நேற்று முன் தினம் மாலை, ஜாகீர் உசேன் அங்கு சென்று இப்ராகிமை பார்த்தபோது, அவன் உடல் முழுவதும் பல இடங்களில் சூடு வைத்த காயங்கள் இருந்தன. இதுகுறித்து கேட்ட போது, அரபி ஆசிரியர் முகமது ஷேக் பரீத், 35, என்பவர், சூடு வைத்தது தெரியவந்தது. சிறுவன் இப்ராகிம், அதிகாலை 5.00 மணிக்கு எழுவதில்லை; சொல்பேச்சு கேட்பதில்லை; அதனால், அவனை கண்டித்ததாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த ஜாகீர் உசேன், மங்கலம் போலீசில் புகார் செய்தார். காயமடைந்த இப்ராகிம், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுவனுக்கு சூடுவைத்து சித்ரவதை செய்த ஆசிரியர் முகமது ஷேக் பரீத் கைது செய்யப்பட்டார். திருப்பூர் ஜே.எம்., மாஜிஸ்திரேட் வேலுசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுவன் இப்ராகிம், ஒரு மாதத்துக்கு முன்னரே, இப்பள்ளியில் சேர்க்கப்பட்டான். அவன், அதிகளவில் விளையாட்டுத்தனமாக இருந்ததால், பள்ளி நிர்வாகிகள், அவனை பெற்றோருடன் அனுப்ப முடிவு செய்தனர். ஆனால், ஆசிரியர் ஷேக், சிறுவனை தன் வீட்டில் வைத்து பராமரிப்பதாக கூறி, அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவனை சுத்தியலால் தாக்கியும், அயர்ன் பாக்ஸில், உடல் முழுவதும் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல், சிறுவன் உடலில் புண்கள் கொப்பளமாக இருந்தன. சல்மான் என்ற எட்டு வயது மாணவன் ஒருவனும், அவரால், கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment