கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி, மாமியாரை கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டார். ரூ.3 லட்சம் பேரம்பேசி அவரை தீர்த்துக் கட்டியதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
63 வயது மாமியார்
கோவை ஒண்டிபுதூர் போடிநாயக்கனூர் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி ரங்கநாயகி(வயது63). இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கு திருமணமாகிவிட்டது. ரங்கநாயகிக்கு சொந்தமான வீடு மற்றும் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் மாதம் ரூ.15 ஆயிரம் வாடகை வந்தது. அதன் மூலம் ரங்கநாயகி னி வீட்டில் வசித்து வந்தார்.
ரங்கநாயகியின் வீட்டின் அருகே அவருடைய மகன் பாலசுப்பிரமணியம் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பத்மபிரியா(30). இவர்களுக்கு அபிஷேக்(13), ஹரிகரசுதன் என்ற 2 மகன்கள் உள்ளனர். மருமகள் பத்மபிரியா கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் கருணாகரன். ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் பத்மபிரியா–கருணாகரன் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
கள்ளக்காதலனுடன் உல்லாசம்
கணவர் பாலசுப்பிரமணியம் டிரைவராக வேலை செய்து வந்ததால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். இதுபத்மபிரியாவுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. கணவர் வெளியில் செல்லும் நேரம் பார்த்து கருணாகரனை வீட்டுக்கு அழைத்து வந்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
தனது மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு ஆண் வந்து செல்வது ரங்கநாயகிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பத்மபிரியாவிடம கேட்டபோது ‘என்னுடன் வேலை பார்ப்பவர்’ என்று கூறி சமாளித்தார். இருப்பினும் மருமகளின் நடத்தையில் ரங்கநாயகிக்கு இருந்து வந்த சந்தேகம் தீரவில்லை. இதனால் மாமியார் மீது மருமகள் பத்மபிரியாவுக்கு எரிச்சல் ஏற்பட்டது.
தீர்த்து கட்ட முடிவு
கடை, வீடுகள் மூலம் கிடைக்கும் வாடகை பணத்தை மாமியாரே வைத்து செலவு செய்ததாலும், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும் மாமியாரை தீர்த்துக்கட்ட பத்மபிரியா எண்ணினார். தனது யோசனையை கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். கருணாகரனும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
கூலிப்படையை ஏவி ரங்கநாயகியை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக கருணாகரன் தான் வேலை பார்க்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்க்கும் கணேசன், மகேந்திரன் ஆகியோரை அணுகினார்.
ரூ.3 லட்சம் பேரம்
கூலிப்படையை சேர்ந்த 2 பேரும் ரூ.3 லட்சம் தந்தால் ரங்கநாயகியை தீர்த்துக்கட்டி விடுவதாக கூறினார்கள். இதற்கு மருமகள் பத்மபிரியாவும், கள்ளக்காதலன் கருணாகரனும் சம்மதம் தெரிவித்தனர். தனது மாமியாரை தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ய வேண்டும் என்று மருமகள் பத்மபிரியா கூலிப்படையினரிடம் கூறினார். இதற்கான தருணத்தை எதிர்பார்த்து இருக்குமாறும், செல்போன் மூலம் அழைப்பதாகவும் பத்மபிரியா கூலிப்படையிடம் கூறினார்.
இதற்கு வசதியாக கணவர் பாலசுப்பிரமணியம், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை வேனில் ஏற்றிக்கொண்டு 2 நாட்களுக்கு முன்பு சென்றார். கணவர் திரும்பிவர சில நாட்கள் ஆகும் என்பதால், இடைபட்ட நாட்களில் மாமியாரை கொன்றுவிட திட்டமிட்டு பத்மபிரியா கொலைகளத்தில் இறங்கினார்.
தாய்வீட்டுக்கு குழந்தைகளை அனுப்பினார்
பள்ளிச்செல்லும் குழந்தைகள் அபிஷேக்கும், ஹரிகரசுதனும் அரையாண்டு விடுமுறையில் வீட்டில் இருந்ததால் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றும், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாது என்றும் பத்மபிரியா கருதினார். இதனால் கோவை தொப்பம்பட்டியில் உள்ள தனது தாய் அமுதவள்ளியின் வீட்டில் தனது 2 குழந்தைகளை விட்டுவிட்டு வீடு திரும்பினார்.
பின்னர் கள்ளக்காதலன் கருணகரனுக்கும், கூலிப்படையினருக்கும் செல்போன் மூலம் பத்மபிரியா தகவல் கொடுத்து நள்ளிரவில் தனது வீட்டுக்கு வந்து மாமியாரை தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளார்.
கழுத்தை அறுத்துக்கொன்றனர்
நள்ளிரவில் கூலிப்படையை சேர்ந்த கணேசன், மகேந்திரன் ஆகியோர் பத்மபிரியாவின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் மாமியார் ரங்கநாயகியின் வீட்டுக்கதவை மருமகள் தட்டுவதுபோல் தட்டி உள்ளே சென்றுள்ளனர். மர்ம ஆசாமிகள் உள்ளே சென்றதும் ரங்கநாயகி கத்தி கூச்சல் போட முயன்றுள்ளார். இதனால் கூலிப்படையினர் ரங்கநாயகியின் வாயில் துணியை திணித்து, சமையல் அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் ஆட்டை கீழே தள்ளுவதுபோல் மூதாட்டி ரங்கநாயகியை கீழே தள்ளி, ஒருவன் காலை பிடித்துக்கொள்ள, மற்றொருவன் முகத்தை பிடித்துக்கொண்டு ரங்கநாயகியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். சிறிதுநேரத்தில் ரத்தவெள்ளத்தில் ரங்கநாயகி இறந்ததும், கொலையாளிகள் வந்தவேலை முடிந்துவிட்டது என்று கூறி, அருகில் உள்ள பத்மபிரியாவின் வீட்டுக்குள் சென்று ரத்தக்கறை படிந்த தங்களது கை,கால்களை கழுவிவிட்டு இரவோடு, இரவாக 2 பேரும் தப்பிச்சென்றுவிட்டனர்.
மருமகளின் நாடகம் நேற்று காலை எதுவுமே தெரியாததுபோல் மருமகள் பத்மபிரியா நடந்துகொண்டார். அந்த கட்டிடத்தில் பர்னீச்சர் கடையை திறப்பதற்காக அதன் உரிமையாளர் காலை 9மணிக்கு வந்துள்ளார். அப்போது பத்மபிரியா அவரிடம் சென்று, மாமியாரை காணவில்லை என்றும், நான் அவரிடம் பேசாததால் வீட்டுக்குள் சென்று பார்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். பர்னீச்சர் கடைக்காரர் ரங்கநாயகியின் வீட்டு கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றபோது, ரங்கநாயகி சமையல் அறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து பத்மபிரியாவிடம் கூறினார். பத்மபிரியாவும் எதுவும் தெரியாததுபோல் மாமியாரின் வீட்டுக்குள் சென்று, ‘அய்யோ மாமியாரை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, 5 பவுன் நகையை யாரோ கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர்’ என்று கூச்சல் போட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ரங்கநாயகியின் வீட்டு முன்பு கூட்டம் கூடியது. போலீஸ் விசாரணையில் அம்பலம்
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உதவி கமிஷனர் முருகசாமி, இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்–இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் கொலை நடைபெற்ற ரங்கநாயகியின் வீட்டுக்கும், மருமகள் பத்மபிரியாவின் வீட்டுக்கும் சென்றது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் மாமியார் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த பத்மபிரியா தனக்கு எதுவும் தெரியாது என்று நாடகம் ஆடியதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பத்மபிரியாவிடம் துருவி,துருவி விசாரணை நடத்தியபோது கூலிப்படையை ஏவி மாமியாரை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது. ரூ.3 லட்சம் பேரம் பேசி இந்த கொலை சதியை அரங்கேற்றியதாகவும் பத்மபிரியா போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2 பேர் பிடிபட்டனர்
இதைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக கூலிப்படையை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பத்மபிரியாவின் செல்போனை பறிமுதல் செய்து அதில் பதிவாகி இருந்த கருணாகரன், மற்றும் கூலிப்படையினரின் செல்போன் எண்களை கண்டறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கோவை துடியலூர் பகுதியில் கூலிப்படையை சேர்ந்த கணேசன், மகேந்திரன் ஆகியோர் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று நேற்று பகலில் மடக்கிப்பிடித்தனர். 2 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை நடைபெற்றதும் பத்மபிரியாவின் கள்ளக்காதலன் கருணாகரன் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை, மருமகளே தீர்த்துக்கட்டிய பயங்கர சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment