
பழிவாங்கும் நோக்கில் தமது முன்னாள் பெண் நண்பர்களின் நிர்வாணப் படங்களை இணையத்தில் பதிவேற்றும் வழக்கம் அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பெண்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முயன்றுகொண்டிருக்கின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஹாலி டுரூப் வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள படிக்கட்டுகளை ஒட்டி பிரபல ஹாலிவுட் நடிகை மெர்லின் மன்ரோவின் புகைப்படங்கள் பல ஒட்டப்பட்டுள்ளன. 33 வயதான ஹாலி டுரூப் தான் கொண்டாடும் மேர்லின் மன்ரோவைப் போலவே எடுப்பாக, பார்க்க அழகாக இருக்கிறார். அதே நேரம் டெக்சாஸ் பெண்களிடம் இருக்கும் ஒரு வித இயல்பான யதார்த்தம் இவரிடம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இவரது நண்பர் தொலைபேசியில் அழைத்து ''டெஸ்சன் இணைய தளத்தில் பல பெண்களின் நிர்வாணப் படம் இருக்கிறது அதில் உனது படமும் இருக்கிறது'' என்று இவரிடம் தெரிவித்தார்.
மூன்று எக்ஸ்களைக் கொண்ட டெக்ஸன். டாட். காம் என்ற இணைய தளத்துக்கு சென்று பார்த்த போது ஹாலி டுரூப் 24 வயது இருக்கும்போது அவர் தனது முன்னாள் ஆண் நண்பருக்காக மேலாடையின்றி எடுத்துக் கொண்ட படங்கள் அதில் இருந்தன. படங்களுடன் அவரது பெயர், முகநூல் முகவரி, அவர் இருக்கும் இடத்தை குறிக்கும் கூகுள் மேப் போன்றவையும் இணையத்தில் கொடுக்கப்பட்டிருந்தன.
இதன் பிறகு அறிமுகமில்லாத நபர்கள்கூட தன்னை தொடர்பு கொள்ள முயன்றதாக ஹாலி பிபிசியிடம் கூறினார்.
சிலரின் படங்களை அவர்களின் முன்னாள் ஆண் நண்பர்களே இணைய தளத்தில் பதிவேற்றியுள்ளனர். வேறு சிலரின் படங்கள் கம்ப்யூட்டர், தொலைபேசி போன்றவைகளில் இருந்து திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டெக்ஸ்சான் டாட் காம் தளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது ஒன்று கூடி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் 30 பெண்கள் சம்மந்தப்பட்ட இணைய தள உரிமையாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த கம்பெனி மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடுத்தனர். இப்போது அந்த இணையதளம் மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் பெண்களின் போராட்டம் தொடர்கிறது.
ஒரு இணைய தளத்தை பயன்படுத்துவோர் கொண்டு சேர்க்கும் அதாவது அப்லோட் செய்யும் விடயங்களுக்கு இணைய தள உரிமையாளர்கள் பொதுவாக பொறுப்பாக மாட்டார்கள் என்று அமெரிக்க சட்டங்கள் கூறுகின்றன. இந்த இணைய தள உரிமையாளரும் தான் எவ்வித குற்றத்தையும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார். அதேநேரம் பாதிக்கப்பட்ட பெண்கள், பழிவாங்கும் நோக்கில் நிர்வாணப்படங்களை இதுபோல வெளியிடுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ஒரு பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்ந்து வலியுறுத்துவதன் காரணமாக, சில உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இந்தக் கவலைகளை முன்எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளனர். பழி வாங்கும் நோக்கில் நிர்வாணப் படங்களை வெளியிடுவது குற்றம் என்று கூறும் சட்ட முன்வரைவு விஸ்கான்சின், நியுயார்க், மேரிலாண்ட், கலிபோர்னியா உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கே டெக்சாசில் இந்த விடயம் குறித்து டுவிட்டரிலும், இணையத்தின் பிற இடங்களிலும் காரசார விவாதம் நடந்து வருகிறது. குற்றவியல் சட்ட வழக்கறிஞரும், வலைப் பதிவருமான மார்க் பென்னட், பழிவாங்கும்நோக்கில் இணையத்தில் நிர்வாணப் படங்களை பதிவேற்றுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அறம் சார் தடுமாற்றங்களால்தான் இப்படி ஒரு சட்டம் வேண்டும் என்று சிலர் வாதிடுவதாகவும் அவர் கூறுகிறார்.
பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாகிவிட்டு, சட்டத்தை நாடுவதை விட வருமுன் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே என்ற வாதம் இங்கே வைக்கப்படுகிறது. அதாவது அதுபோன்ற நிர்வாணப் படங்களை எடுக்காமல் இருந்திருக்கலாமே என்பதே அந்த யோசனை.
ஆனால் இந்த யோசனையை ஹாலி நிராகரிக்கிறார். “அதுபோல படங்களை எடுக்கும் உரிமை எனக்கு உண்டு. அந்தப் படம் எனக்காகவும் எனது அப்போதைய ஆண் நண்பருக்காகவும் எடுக்கப்பட்டது. உலகம் பார்ப்பதற்காக இல்லை. யாரோ களவாக அந்தப் படத்தை எடுத்து இணையத்தில் போட்டு எனது வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட்டனர்” என்றார் அவர்.
No comments:
Post a Comment