Wednesday, 25 December 2013

புத்தாண்டை எப்படியெல்லாம் கொண்டாடலாம்! சில நிபந்தனைகள்

சென்னை மாநகரில் புத்தாண்டு தினத்தில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சென்னையில் களைகட்டும். வரவிருக்கும் 2014 புத்தாண்டை வரவேற்று, கோலாகலமாக கொண்டாட சென்னைவாசிகள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.
வழக்கமான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவிருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல் கட்டமாக நட்சத்திர ஹொட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து, சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு கூடுதல் பொலிஸ் கமிஷனர் ராஜேஸ்தாஸ், இணை கமிஷனர் சண்முகவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
சென்னையில் உள்ள சுமார் 70 நட்சத்திர ஹொட்டல்களின் நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நட்சத்திர ஹொட்டல்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த முடிவுகள் வருமாறு:
சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், நடனம் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகளை நள்ளிரவு 12 மணி முதல், 1 மணி வரை நடத்தலாம்.
24 மணி நேர கொண்டாட்டங்களுக்கு, விசேஷ அனுமதி பெற்ற ஹொட்டல்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு தரப்படும்.
நடன நிகழ்ச்சி அரங்கம் நிரந்தர கட்டிடத்தில் இருக்க வேண்டும். தற்காலிக மேடைக்கு அனுமதி இல்லை. நடன நிகழ்ச்சி அரங்கத்திற்கு அருகில் மது அருந்தும் பார் இருக்கக் கூடாது. மது அருந்தும் பார் தனியாக இருக்க வேண்டும்.
நடன நிகழ்ச்சிகளில் எல்லை மீறல் இருக்கக் கூடாது. முத்தம் கொடுத்தல் மற்றும் அரைகுறை ஆடை அணிந்த குத்தாட்டம் போன்ற ஆபாச நடனத்தை அனுமதிக்கக்கூடாது. நடன நிகழ்ச்சி இசை நிகழ்ச்சியில், அதிக சத்தம் எழுப்ப அனுமதிக்க கூடாது.
மது விருந்தில் அதிகமாக மது அருந்த அனுமதிக்கக் கூடாது. போதையில் இருப்பவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது. ஹொட்டல் நிர்வாகத்தினர் போதையில் இருப்பவர்களை காரில் அழைத்துச் சென்று வீட்டில் பாதுகாப்பாக விட வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
புத்தாண்டு விழா நடக்கும் நட்சத்திர ஹொட்டல்களில், 31ம் திகதி மாலை 6 மணி முதல் நீச்சல் குளத்தை மூடிவிடவேண்டும். மறுநாள்தான் நீச்சல் குளத்தை திறக்க வேண்டும்.
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெளி நாட்டவர் பற்றிய விவரங்களை முன் கூட்டியே பொலிசில் தெரிவிக்க வேண்டும். வெளிநாட்டவரின் விசா பற்றிய நகல்களையும் பொலிசில் ஒப்படைக்க வேண்டும்.
மது விருந்து, நடன நிகழ்ச்சி அரங்கங்களில் கண்காணிப்பு கமெரா பொருத்தி இருக்க வேண்டும். நிகழ்ச்சி காட்சிகளை, கண்காணிப்பு கமெரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.
நட்சத்திர ஹொட்டல்களில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொலிசார் முன் கூட்டியே பார்வையிட்டு, சோதனை நடத்திட ஹொட்டல் நிர்வாகத்தினர் அனுமதிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும்போது, பொலிசார் வெளியில் பாதுகாப்புக்கு இருப்பார்கள்.
பொலிசாரின் இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட நட்சத்திர ஹொட்டல் நிர்வாகிகள் நிரூபர்களிடம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment