சின்னமனூர்: தேனி, சின்னமனூர் அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க, ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால், ரோட்டிலேயே 45 நிமிடம் துடிதுடித்த நிலையில் கிடந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.
சின்னமனூர் அருகே கோட்டூரை சேர்ந்தவர் மதுரைவீரன் ,32. இவரது மனைவி மணிமேகலை,26. நேற்று மணிமேகலையை, உத்தமபாளையம் புதூரில் உள்ள அவரது தாய் வீட்டில் விடுவதற்காக,டூவீலரில் மதுரை வீரன் அழைத்துச் சென்றார். கோட்டூரில் இருந்து சீலையம்பட்டி மெயின்ரோட்டில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே மதியம் 1 மணிக்கு சென்ற போது, மணிமேகலை நிலை தடுமாறி விழுந்தார். மணிமேகலையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக டூவீலரில் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள சின்னமனூர் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. உடனடியாக வீரபாண்டி ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கும் ஆம்புலன்ஸ் இல்லை, என்ற பதில் வந்தது. இதனால் 45 நிமிடம், உயிருக்கு போராடிய நிலையில் ரோட்டில் கிடந்தார் மணிமேகலை. பின்னர் அந்த வழியாக வந்த கார் ஓட்டுனரிடம் மணிமேகலையின் நிலையை புரியவைத்து, சின்னனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்தில் மணிமேகலை இறந்தார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment