Thursday, 12 September 2013

தேர்வு எழுத மது குடித்து விட்டு வந்த பிளஸ் 1 மாணவன்


கழுகுமலை : தூத்துக்குடி மாவட் டம், கழுகுமலையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. நேற்று முன்தினம் பிற்பகல் நடந்த தேர்வின்போது வகுப்பறையில் இருந்து மது வாடை வீசியது. ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில், பிளஸ் 1 வரலாற்று பிரிவு மாணவர் ஒருவர் மது அருந்திவிட்டு முழு போதையில் தேர்வு எழுத வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர் ஜிந்தா மதார்பக்கீர் தகவல் தெரிவித்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் பள்ளிக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது குடித்து விட்டு வந்ததை ஒப்புக்கொண் டார். இதுதொடர்பாக, கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாணவரின் பெற்றோரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவரை வரும் 20 நாள் சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே இப்பள்ளியில் கடந்த ஆண்டு இதேபோல் பள்ளிக்கு மது அருந்தி வந்த மாணவர் ஒருவர், பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்ட்ரா தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 200 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு ஒரு மாதத்துக்கு ரூ.42 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது.

No comments:

Post a Comment