சென்னை: ‘மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்‘ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: மராட்டிய மாநில அரசு சமீபத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறது. நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் மற்றும் இதர மனித நேயமற்ற கொடுமையான பழக்கங்களுக்கு எதிரான சட்டம். மோசடி செயல்களில் ஈடுபடுவோர் கைதானால், உடனே ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்படும் போது, ஏழாண்டு தண்டனை கிடைக்கும்.மராட்டிய மாநிலச் சட்டப்பேரவையில் 13 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இந்தச் சட்டம், அவசர அவசரமாக 22.8. 2013 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கு காரணம் மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற பகுத்தறிவாளரும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தீரம்மிக்க போராளியுமான நரேந்திர தபோல்கர், புனே நகர வீதிகளில் 20.8.2013 அன்று படுகொலை செய்யப்பட்ட மாபாதகச் சம்பவம் தான். சாதிய அமைப்பை அறவே ஒரூ.த்திட அரும்பாடுபட்ட நரேந்திர தபோல்கர், பண்பாட்டுப் புரட்சி நடக்காமல் சமத்துவம் சாத்தியமில்லை என்றார்.தபோல்கரின் நண்பர் அஜீத் அபயங்கர் என்பவர், “தபோல்கர், ஆண்டவனுக்கோ, மதத்துக்கோ எதிரானவர் இல்லை; நம்பிக்கையின் பெயரால் சுரண்டல் செய்யப்படுவதற்கு எதிராகவே அவர் போராடி வந்தார்“ என்று கூறியிருக்கிறார். அபயங்கரின் இந்தக் கருத்தைப் படித்தபோது, “கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாதே என்பதற்காக“என்ற, நான் எழுதிய “பராசக்தி“யின் வசனம் என் நினைவுக்கு வந்தது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மராட்டிய மாநில அரசு இயற்றியிருக்கும் சட்டத்தைப் போலவே, தமிழகத்திலும் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும், பேராசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் அறிவியல் இயக்கத்தினர் பலரும் முன் வைத்திருக்கிறார்கள். மூடநம்பிக்கைகளைப் பற்றி விவாதிக்கக்கூடிய சூழ்நிலையைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உருவாக்கிட வேண்டும் என்ற வேண்டுகோளும் எழுந்துள்ளது.ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படைக் கடமை ஆகும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51 ஏ(எச்) உணர்த்துகிறது.பில்லி சூனியம், மாந்திரீகம், ஜோதிடம், ஏவல் என்பவை மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், அவை ‘அறிவியல் மனப்பான்மை’ என்ற கட்டமைப்புக்கு எதிரானவை; இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை. அண்மையிலே நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் சமுதாயத்தை மூடநம்பிக்கை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை உணர்த்துகிறது.சென்னையை அடுத்த கொளத்தூர், ரெட்டேரி பகுதியை சேர்ந்தவர் திலகராஜ் என்பவர். ரத்தப் பரிசோதனை மையம் நடத்தி வந்தார். அவருடைய மனைவி மைனா என்ற லட்சுமி அழகு நிலையத்தில் பயிற்சி பெற்றவர்.
இவர்களுடைய மகள் சினேகா, அழகுக் கலையில் ஆர்வம் கொண்டவர். தாய் மகள் இருவரும் சேர்ந்து, தனியாக அழகு நிலையம் நடத்த முடிவுசெய்து, புழலை அடுத்த புத்தகரத்தில் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் கடை திறப்பு விழா நடைபெற்றது.புரோகிதர் ராமமூர்த்தி என்பவர் கடையின் உள்ளே ‘ஹோமம்’ வளர்த்தார். பின்னர், நல்ல நேரம்’ பார்த்து, கடையின் முன்பகுதியில் பெயர்ப் பலகையை மாட்ட திலகராஜ், அவரது மகள் சினேகா, எலக்ட்ரீஷியன் நவீன்சந்திரன், புரோகிதர் ராமமூர்த்தி ஆகிய நால்வரும் கடையின் உள்ளே இருந்து பெயர்ப் பலகையை வெளியே தூக்கி வந்தனர்.‘வாஸ்து சாஸ்திர’ப்படி வைக்குமாறு புரோகிதர் ராமமூர்த்தி சொன்னார். அவர் அறிவுரைக்கேற்ப, பெயர்ப் பலகையை அப்படியும் இப்படியுமாக அந்த 4 பேரும் மாற்றி மாற்றி வைத்தனர்.மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பெயர்ப் பலகையில் இருந்த இரும்பு உரசி, அதன் வரூ.யாக மின்சாரம் பாய்ந்து, அதைப் பிடித்து கொண்டிருந்த அந்த நான்கு பேரையும் மின்சாரம் தாக்கி, அதே இடத்தில் அவர்கள் கருகிப் பரிதாபமாகப் பலியாயினர்.மற்றொரு செய்தி, நரபலியைப் பற்றியது. சென்னை, வியாசர்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி விளக்கியிருந்தேன். குடுகுடுப்பைக்காரன் ஒருவன் ‘செய்வினை’ வைத்திருப்பதாக சொன்னதை நம்பி, வியாசர்பாடியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், குடுகுடுப்பைக்காரன் கொடுத்த தாயத்தை கட்டிக்கொண்டு, கீதா என்பவரின் குழந்தை இரண்டரை வயது விஷ்ணுவை, தன் வீட்டிற்கு அழைத்து வந்து, தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கி, கொலை செய்ய முயற்சித்தார்.
குழந்தை மூச்சுத் திணறி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், மகேஸ்வரி குழந்தையை தூக்கிச் சென்று, பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலில் தலைகீழாகப் போட்டுவிட்டு, தவறி விழுந்து விட்டதாக நாடகமாடினார். ஆனால், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது குழந்தை இறந்துவிட்டான். குழந்தை விஷ்ணுவின் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். மகேஸ்வரி குடுகுடுப்பைக்காரன் பேச்சை நம்பி, ‘தோஷம்’ கரூ.க்கும் நோக்கத்தில், குழந்தையை நரபலிக்காகக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தார்கள்.“நரபலி பற்றிய இந்தச் செய்தியைப் படித்த போது, நாம் 21ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது. அறிவியல் மிகவும் முன்னேறியிருக்கும் காலம் இது. மனித அறிவுக்கு எட்டாதது எதுவுமே இல்லை என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று உணர்த்தியிருக்கிறது.
“நாம் மீள வேண்டுமானால் சுயமரியாதை பெற்ற மக்களாக வாழ வேண்டுமென்று நினைத்தால் அடிமைப்படுத்தும் மூடநம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்க வழக்கங்களையும் முதலில் விட்டுவிட வேண்டும் “என்று தந்தை பெரியார் 1923ம் ஆண்டில் எடுத்துச் சொன்ன அறிவுரை, 90 ஆண்டுகள் கரூ.ந்ததற்குப் பிறகும் இன்னமும் நமது சமூகத்தில் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பகுத்தறிவு அறிவியல் மனப்பான்மை குறித்த பிரச்சாரம் இன்னும் தீவிரமாகவும் இடைவெளி இல்லாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சுட்டிக் காட்டியுள்ளபடி, சட்டநெறிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.மூடநம்பிக்கை ஒரூ.ப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டதால்; அந்தக் கோரிக்கையை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முனைப்போடு முன்னெடுத்துச் செல்வோம்! அதுவே நரேந்திர தபோல்கர் நினைவுக்கு நாம் செலுத்திடும் வீரவணக்கமாகும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment