அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
"புதிய பணி நியமனம் பெற்றுள்ள ஊழியர்கள் அணியும் உடை அலுவலக கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அரசு அலுவலகங்களின் கவுரவத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலுவலக நேரத்தில் ஆடை கட்டுப்பாட்டு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதாவது ஆண் ஊழியர்கள் சட்டை, முழு பேண்ட், பைஜாமா மற்றும் குர்தா மட்டுமே அணிய வேண்டும். டி-சார்ட் அணியக்கூடாது. அதேபோல் பெண் ஊழியர்கள் சேலை, சுடிதார் ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் பாவாடை, டி-சார்ட் மற்றும் பேண்ட் ஆகியவற்றை அணிந்து அலுவலகங்களுக்கு வரக்கூடாது.
அரசு வாகன டிரைவர்கள் மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீருடையை கட்டாயம் அணிய வேண்டும். அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது."
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment