Thursday, 19 September 2013

நாட்டில், டீ குடிப்பது தவறா?- மும்பை ஐகோர்ட் கண்டனம்


மும்பை: "நாட்டில், டீ குடிப்பது தவறா? சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், டீ குடித்தார் என்பதற்காக, ஒருவரை கைது செய்வதா?' என, போலீசாருக்கு, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறையில் அடைப்பு:


மகாராஷ்டிரா மாநிலம், கோல்காபுரியை சேர்ந்த, விஜய் பாட்டீல் என்பவர், அங்குள்ள பல்கலைக்கழகம் அருகே உள்ள டீக்கடையில், சில மாதங்களுக்கு முன், டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர், போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள், எஸ்.சி.தர்மாதிகாரி மற்றும் ஜி.எஸ்.படேல் ஆகியோரைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்த போது, "விஜய் பாட்டீலை ஏன் கைது செய்தீர்கள்?' என, போலீசிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பதிலளித்து, போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் குற்றவாளி. அவர் மீது, நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், அவர் டீ குடித்துக் கொண்டிருந்ததால், அவரை கைது செய்தோம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


நீதிபதிகள் கண்டனம்:


நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, போலீசாரின் செயலுக்கு, கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் கூறியதாவது: ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக, டீ குடிப்பார்கள். இப்படித் தான் டீ குடிக்க வேண்டும் என, விதி இருக்கிறதா? சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், டீ குடித்தார் என கூறுவது, எப்படி சரியாக இருக்க முடியும்? அப்படி என்றால், சந்தேகம் ஏற்படாத வகையில், டீ குடிப்பது எப்படி என, சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதா? "ஏற்கனவே அவர், பல முறை கைது செய்யப்பட்டுள்ளார்; அவர் பழைய குற்றவாளி' என தெரிவித்து, அவர் மீது தொடரப்பட்டிருந்த வழக்கு விவரத்தை, போலீஸ் சமர்ப்பித்துள்ளது. நூறுக்கும் மேற்பட்ட அந்த வழக்குகளில், எந்த வழக்கிலும் அவர் தண்டனை அனுபவிக்கவில்லை. அவற்றில் பல பைசல் செய்யப்பட்டுள்ளன; சில மட்டுமே நிலுவையில் உள்ளன. மேலும், அந்த வழக்குகள் அனைத்தும், 1998ம் ஆண்டிற்கு முந்தைய வழக்குகள். எனவே, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், டீ குடித்தார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போலீசாரின் செயல் கண்டனத்திற்குரியது. "அவரை கைது செய்யவில்லை என்றால், பல குற்றங்கள் நடைபெற்றிருக்கும்; கைது செய்ததால், அந்தக் குற்றங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன' என, கூறப்படுவதிலும் நியாயம் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

No comments:

Post a Comment