லக்னோ: முசாபர் நகர் கலவரத்தை தூண்டி விட்டதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் ராணா, நேற்று கைது செய்யப்பட்டார். முசாபர் நகர் கலவரம் தொடர்பான பிரச்னை, உ.பி., சட்டசபையில், நேற்று எதிரொலித்தது. சபை கூடியதும், கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, பா.ஜ., உறுப்பினர், சுரேஷ் ராணா, பேச எழுந்தார். சபாநாயகர், மதா பிரசாத் பாண்டே, இதற்கு அனுமதி மறுத்தார். பா.ஜ.,வின் மற்ற உறுப்பினர்கள், அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். "கலவரம் தொடர்பாக, அமைச்சர், அசாம் கான் பேசுவதற்கு அரை மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதுபோல், சுரேஷ் ராணாவுக்கும், நேரம் ஒதுக்க வேண்டும்' என்றனர். சபாநாயகர், இதை ஏற்க மறுத்ததால், பா.ஜ., உறுப்பினர்கள், சபையின் மையப் பகுதிக்கு வந்து, கோஷமிட்டனர். அவர்களை எதிர்த்து, ஆளும், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும், கோஷமிட்டனர். இரு தரப்பினரும், மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, சபை ஒத்தி
வைக்கப்பட்டது. இந்நிலையில், பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் ராணா, நேற்று மாலை, கைது செய்யப்பட்டார். அவர் மீது, கலவரத்தை தூண்டி விடும் வகையில், பொது மக்களிடையே பேசியதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளது. முசாபர் நகர் கலவரத்தை தூண்டி விட்டதாக, பா.ஜ., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, 16 அரசியல்வாதிகள் மீது, வழக்கு பதிவு செய்யப்
பட்டுள்ளது. இவர்களில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும், எட்டு பேர் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, முசாபர் நகர் கலவரத்தில் பலியானோரின் எண்ணிக்கை, நேற்று, 48 ஆக அதிகரித்தது. கலவரம் தொடர்பாக, மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ""கலவரத்தை அடக்குவதில், முதல்வர், அகிலேஷ் யாதவ், தீவிரமாகச் செயல்படவில்லை. அவரின் பொறுப்பின்மை, எனக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment