திருடனின் மனமாற்றத்தால், கொலையில் இருந்து தப்பிய மூதாட்டி
சென்னை எம்.ஜி.ஆர். நகரில், திருடனிடம் ஏற்பட்ட கடைசிநேர மனமாற்றம், 70 வயது மூதாட்டியை கொலையில் இருந்து காப்பாற்றியது. அந்த திருடன் தானும் போலீசில் மாட்டி, தனது நண்பர்கள் இருவரையும் போலீசாரிடம் மாட்டி விட்டான்.
ராஜேஸ்வரி
சென்னை எம்.ஜி.ஆர். நகர், நெசப்பாக்கம், பல்லவன் சாலையில் வசிப்பவர் ராஜேஸ்வரி (வயது 70). இவரது கணவர் பிரான்சில் உள்ளார். இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இவரது 2 மகன்கள் இலங்கையில் வாழ்கிறார்கள். ராஜேஸ்வரி மட்டும் இங்கு தனியாக வாழ்ந்து வந்தார். இவரது கணவரும், மகன்களும் அடிக்கடி சென்னை வந்து, இவரை பார்த்துவிட்டு செல்வார்கள்.
நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரி வீட்டில் இருக்கும்போது, 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்கள் வந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் ராஜேஸ்வரிக்கு நன்கு தெரிந்தவன். இதனால் அவர்கள் மூவரையும், ராஜேஸ்வரி வீட்டுக்குள் அனுமதித்தார். அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர். ராஜேஸ்வரி தண்ணீர் கொண்டுவர சமையலறைக்கு சென்றார்.
கழுத்தை நெரித்தனர்
திடீரென்று 3 சிறுவர்களில், 2 சிறுவர்கள் ராஜேஸ்வரி பின்னால் சென்றனர். அவரை கீழே தள்ளி மார்பில் ஏறி உட்கார்ந்து கழுத்தை நெரித்தனர் ராஜேஸ்வரியால் கூச்சல் போட முடியாதவாறு வாயை பொத்திவிட்டனர்.
இந்த நேரத்தில் 3-வது சிறுவன், வீட்டுக்கு வெளியில் ஓடிவந்து கூச்சல் போட்டான். கொலை நடக்கிறது, காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டான். இதைக்கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, போலீஸ்காரர் ஸ்ரீதர் ஆகியோரும் சத்தம் கேட்டு அங்கு வந்தனர்.
பிடிபட்டனர்
ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்ய முயன்ற சிறுவர்கள் இருவரையும், கூச்சல் போட்ட சிறுவனையும் போலீசாரும், பொதுமக்களும் மடக்கிப்பிடித்தனர். எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
ராஜேஸ்வரி, கொலையில் இருந்து உயிர் பிழைத்தார். சிறுவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. 3 சிறுவர்களும், ராஜேஸ்வரியை கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடிக்க திட்டம் போட்டு வந்துள்ளனர்.
ஆனால் கடைசி நேரத்தில் ஒரு சிறுவன் மனது மாறி, வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்து கூச்சல் போட்டு விட்டான். இதனால் ஒரு பெரிய குற்றச்சம்பவம் தடுக்கப்பட்டதோடு, ஒரு உயிரும் காப்பாற்றப்பட்டுள்ளது.
கொலை திட்டம்
மேலும் இந்த 3 சிறுவர்களும் நண்பர்கள். அவர்களில் ராஜேஸ்வரிக்கு நன்கு தெரிந்த சிறுவன்தான், கொலை திட்டத்தை வகுத்துள்ளான். ஆனால் ராஜேஸ்வரியை காப்பாற்றிய சிறுவனுக்கு கொலை திட்டம் பிடிக்கவில்லை. அதனால் கொலை வேண்டாம் என்று முதலிலேயே எதிர்த்தான். எனவே ராஜேஸ்வரியை மிரட்டி நகைகளை பறிக்கலாம் என்று திட்டத்தை மாற்றினார்கள். ஆனால் திடீரென்று கொலைக்கு முயன்றதால், கொலை பிடிக்காத சிறுவன் கூச்சல்போட்டு, கூட்டத்தை கூட்டிவிட்டான்.
3 சிறுவர்களிடமும், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment