அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள்
அமெரிக்காவில் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 அதிகாரிகள் உள்பட 7 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
துப்பாக்கி சூடு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க கப்பல் கட்டும் தளம் உள்ளது. அங்கு என்ஜினீயர்கள், ஊழியர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று காலையில் முகமூடி அணிந்து ராணுவ சீருடையில் 2 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்களில் ஒருவன், 6 அடி உயரத்தில் கறுப்பினத்தை சேர்ந்தவன் போல இருந்தான். அவர்கள் 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
7 பேர் பலி
இதில், கொலம்பியா மாவட்ட போலீஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி உள்பட 7 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் மர்ம மனிதர்களுடன் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். எப்.பி.ஐ. போலீசார் அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர். அவசர கால வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகளும் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தன. கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று, கட்டிடத்தின் உச்சியில் வட்ட மடிக்கத் தொடங்கியது.
விமானங்கள் நிறுத்தம்
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, பக்கத்தில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. கப்பல் கட்டும் தளம் அருகில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. பள்ளிக்கூடங்கள் உள்பக்கமாக பூட்டப்பட்டன. பாலங்களும் மூடப்பட்டன. சம்பவம் நடந்த இடத்துக்கு 1.8 கி.மீ. தூரத்தில் அமெரிக்க பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையிலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டது.
போலீசாருக்கும், மர்ம மனிதர்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்தது. ஒவ்வொரு மாடியாக தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் விரட்டி விரட்டி சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 மர்ம ஆசாமிகளுமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒபாமாவுக்கு விளக்கம்
சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
எப்.பி.ஐ. அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசாருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு ஒபாமா உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் நேற்றைய குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment