Sunday, 15 September 2013

முஸ்லிம்கள் போல் சீக்கியர்களை தீவிரவாதிகளாக பார்க்கும் அமெரிக்கர்கள்



சீக்கியர்களைப் பற்றி அறியாத அமெரிக்கர்கள் பலரும், அவர்களை தீவிரவாதிகள் என்ற தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின், "ஸ்டேன்போர்டு' பல்கலைக்கழகத்தில் உள்ள, சீக்கியர் நல அமைப்பை சேர்ந்த ஆய்வாளர்கள், அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களின் வாழ்க்கை முறை மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றிய ஆய்வை மேற்கொண்டனர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஆய்வறிக்கை : அமெரிக்காவில், சீக்கியர்களுக்கு கிடைக்கும் சமூக அந்தஸ்து குறித்து ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கர் பலரும், சீக்கியர்களை, முஸ்லிம்களின் ஒரு பிரிவினராகவே கருதுகின்றனர். சீக்கியர்களின் பூர்வீகம், இந்தியா என்பதை, 70 சதவீத அமெரிக்கர்கள் அறிந்திருக்கவில்லை. சீக்கிய மதம் பற்றி, அறியாத பெரும்பாலான அமெரிக்கர்கள், அவர்கள் புத்த மதம் அல்லது இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என, விடையளித்தனர். 
தலைப்பாகை மற்றும் தாடி : அமெரிக்கர்களில் அதிகம் பேர், "சீக்கியர்கள் பயங்கரவாதிகள்' என, நம்புகின்றனர். சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், தலைப்பாகை மற்றும் தாடி வைத்திருந்ததால், தாடியும், தலைப்பாகையும் அணிந்திருக்கும் சீக்கியர்களும் பயங்கரவாதிகளே என, அமெரிக்கர்களில் பலர் தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர். இதனால், அமெரிக்க சீக்கியர்கள் பலரும், இனவெறித் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. சீக்கியர்களில் பலரும், டாக்டர்கள், ஆ சிரியர்கள், நர்சுகள், விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் டிரைவர்கள் போன்ற பல பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர். 
70 சதவீத அமெரிக்கர்கள் : அமெரிக்கர்கள், நாள்தோறும் தங்கள் அன்றாட பணிகளில், சீக்கியர்களை சந்திக்க நேரிடுகிறது. எனினும், 70 சதவீத அமெரிக்கர்கள் அவர்களை, வெறுக்கின்றனர், அஞ்சுகின்றனர். சீக்கியர்களின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தவும், அமெரிக்கர்களின் தவறான எண்ணத்தை போக்கவும் இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment