குழந்தை இல்லாததால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்
திருவான்மியூரில் குழந்தை இல்லாததால் மனைவியை தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர். கணவன்-மனைவி இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழந்தை இல்லை
சென்னை திருவான்மியூர் குப்பம் ரோட்டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). இவர், அதே பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (32).
இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் முருகேசன், அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
2-வது திருமணம்
இதற்கிடையில் முருகேசன் 2-வது திருமணம் செய்ய திட்டமிட்டார். இதற்காக மகேஸ்வரியிடம் 2-வது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டு தரும்படி கூறினர். ஆனால் அதற்கு மகேஸ்வரி மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது மகேஸ்வரி, “நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று மிரட்டினார். அதற்கு முருகேசன், “நீ என்ன தற்கொலை செய்வது, நானே உன்னை கொளுத்துகிறேன் பார்” என்று கூறி விட்டு மகேஸ்வரியின் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
தீயுடன் ஓடிவந்தார்
அப்போது மகேஸ்வரி உடலில் எரிந்த தீயுடன் கணவரை கட்டிப்பிடித்தார். இதனால் முருகேசன் மீதும் தீப்பிடித்துக்கொண்டது. அதிர்ச்சி அடைந்த முருகேசன், மனைவியை தள்ளி விட்டு கதவை திறந்து தெருவுக்கு ஓடி வந்தார்.
உடலில் எரியும் தீயுடன் மகேஸ்வரியும் கணவரை கட்டிப்பிடிக்க பின்தொடர்ந்து ஓடி வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் தீக்காயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் உடல் கருகிய மகேஸ்வரி மற்றும் தீக்காயம் அடைந்த முருகேசன் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மகேஸ்வரி உயிருக்கு போராடி வருகிறார். இதையடுத்து அவரிடம் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். மகேஸ்வரி அளித்த மரண வாக்குமூலத்தில், “எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் எனது கணவரே என் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டார்” எனக்கூறியதாக தெரிகிறது.
மகேஸ்வரி கட்டிப்பிடித்ததால் தீக்காயம் அடைந்த முருகேசனும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment