ரூ.14 லட்சம் தங்க நாணயங்களுடன் அனாதையாக கிடந்த மர்ம பைகள்
விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த மர்ம பைகளில் ரூ.14 லட்சம் மதிப்பு உள்ள தங்க நாணயங்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அனாதையாக கிடந்த பைகள்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் உடமைகள் வரும் கன்வேயர் பெல்ட் பகுதியில் நேற்று 2 பைகள் நீண்ட நேரமாக அனாதையாக கிடந்தன. இதை கவனித்த விமான நிலைய ஊழியர்கள், மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அந்த பைகளில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்து 2 பைகளையும் சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு இல்லை என தெரியவந்தது. பின்னர் பைகளை திறந்து பார்த்தபோது அதில் துணிகளும், சாக்லெட்டுகளும் இருந்தன.
தங்க நாணயங்கள்
மேலும் 2 பைகளிலும் கறுப்பு நிற பெட்டிகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது தலா 25 தங்க நாணயங்கள் இருந்தன. 400 கிராம் எடைகொண்ட அவற்றின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். அவைகள் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த பைகளில் விமானத்தில் பயணம் செய்த ஸ்டிக்கர் இருந்தது. அவற்றை வைத்து சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது அது கொழும்பில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டதும், விமானத்தில் வந்த சென்னை மண்ணடியை சேர்ந்த முகமது ரபீக், சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த இப்ராகீம்கான் ஆகியோருக்கு சொந்தமான பைகள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பில் இருந்து கடத்தல்
முகமது ரபீக், இப்ராகீம்கான் இருவரும் கொழும்பில் இருந்து தங்கநாணயங்களை கடத்தி வந்த போது, விமான நிலையத்தில் பலத்த சோதனை போடப்பட்டு உள்ளதை கண்டு பயந்து அந்த பைகளை எடுக்காமல் விட்டுச்சென்று இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment