குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, இரு பெண் குழந்தைகளை, காவிரி ஆற்றில் வீசி கொலை செய்து, தானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாயின் உடலை, மீட்புக் குழுவினர் கைப்பற்றினர். குழந்தைகளின் உடல்களை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சேர்ந்தவர், செல்வராஜ், 27; ரிக் வண்டி தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி, 23. இருவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஐந்து வயதில் பெண் குழந்தை இருந்தது. இந் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான தேன்மொழி, முதல் குழந்தையுடன், குமாரபாளையம் அடுத்த, திருவள்ளுவர் நகரில் உள்ள தந்தை வீட்டுக்கு, சில மாதங்களுக்கு முன் பிரசவத்துக்காக சென்றார். இரண்டு மாதத்துக்கு முன், மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையை பார்க்க வந்த செல்வராஜ், மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால், தேன்மொழியிடம் தகராறு செய்து விட்டுச் சென்றார். அதன்பின், தேன்மொழி மற்றும் குழந்தைகளை பார்க்க செல்லவில்லை. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த தேன்மொழி, பெற்றோர் வீட்டில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, குமாரபாளையம் அடுத்த, பழைய காவிரி பாலத்தில் நடந்து சென்றார்.
திடீரென, கையில் வைத்திருந்த, இரு பெண் குழந்தைகளையும் ஆற்றில் தூக்கி வீசினார். அந்த வழியில் சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிடவே, தேன்மொழியும், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.குமாரபாளையம் போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு துறையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு நேற்று காலை, 8:45 மணிக்கு, சமயசங்கிலி கதவணையில் இருந்து, தேன்மொழியின் உடலை கைப்பற்றினர். இரு பெண் குழந்தைகளின் உடல்களை தேடிவருகின்றனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
No comments:
Post a Comment