புதுடில்லி : பாலியல் குற்றங்கள், கொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள், இந்திய சட்டத்தின்படி பெரியவர்களாகவே கருதப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, குற்றத்தில் அவர்களின் பங்கு, குற்றம் நடைபெற்றதற்கான பின்னணி மற்றும் குற்றவாளியின் வயது ஆகியவற்றைக் கொண்டே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வாதங்கள் எழுந்து வந்த நிலையில், 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் குற்றவாளிகள் அனைவரும் பெரியவர்கள் தான் என மத்திய அரசு முடிவுக்கு வந்துள்ளது.
அமைச்சகம் முடிவு : @@பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சட்ட நிபுணர்கள் மற்றும் சமூக மேம்பாட்டாளர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பின், கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள், சிறுவர் சட்டத்தை பயன்படுத்தி பாதுகாக்க கூடாது என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சிறுவர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திருத்தம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சக அதிகாரி கூறியதாவது : சமீபத்தில் கொடூர குற்றங்களுக்காக சிறுவர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது; பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 18 வயதிற்கு கீழ் இருப்பதை காரணம் காட்டி குறைந்தபட்ச தண்டனைக்கு மனு அளிக்கின்றனர்; நிர்பயா வழக்கு, மும்பை சக்தி மில்ஸ் சம்பவம், கவுகாத்தி சம்பவம் உள்ளிட்ட சமீபத்திய கொடூர பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்களும் சிறுவர்கள் தான்; வயதை காரணம் காட்டி குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளின் வயது : @@அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கொடூர குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை பெரியவர்களாக கருதும் முறை நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவில் 20 மாகாணங்களில் இந்த முறை உள்ளது. புளோரிடாவில் தனது சகோதரரை அடித்துக் கொன்ற 13 வயது சிறுவனையும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 5 வயது சிறுவனையும் பெரியவர்களாக கருதி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று பிரிட்டனில் பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் 17 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை பெரியவர்களாக கருதுகிறது. பிரான்சில் இது போன்ற சிறுவர்கள் ஈடுபடும் பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறுவர் நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய சட்டங்கள் : @@இந்தியாவில் கொடூரமான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர் குற்றவாளிகள், சிறுவர் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர். இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்ட சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. இவ்வாறு குறைந்தபட்ச தண்டனை பெற்று சீர்திருத்த பள்ளிகளில் இருக்கும் சிறுவர் குற்றவாளிகளிடம் மனமாற்றம் ஏற்படுவதில்லை என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜூலை மாதம் நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் ஈடுபட்ட 17 வயது குற்றவாளியின் வயது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், தற்போது வழக்கில் குற்றவாளியின் பங்கின் அடிப்படையில் அவர்களின் மனமுதிர்ச்சி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment