அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்
தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
மத்திய மந்திரி கடிதம்
மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சட்டத்தை அமல்படுத்தும் காவல்துறை போன்ற அமைப்புகளால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளது. சில சிறுபான்மை இளைஞர்கள், தாங்கள் வேண்டுமென்றே குறிவைத்து தாக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் அடிப்படை உரிமையை இழப்பதாகவும் உணர்கின்றனர்.
சட்டவிரோதமாக சித்ரவதை
தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை வேரறுப்பது தான் அரசின் முக்கிய நோக்கம் என்றாலும், அப்பாவி மனிதர்கள் யாரும் சட்டவிரோதமாக சித்ரவதை செய்யப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மாநில அரசுகள் ஐகோர்ட்டு ஆலோசனைப்படி சிறப்பு கோர்ட்டுகள் அமைத்து தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரணை நடத்த வேண்டும். இதற்காக சிறப்பு அரசு வக்கீல்களையும் நியமிக்க வேண்டும். நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளைவிட தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரித்து முடிவுக்கு கொண்டுவர முன்னுரிமை வழங்க வேண்டும்.
உரிய நடவடிக்கை
காவல் துறை மதம் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு இழுக்கு ஏற்படாமல் செயல்பட வேண்டும். தீய எண்ணத்துடன், தவறாக எந்த சிறுபான்மை உறுப்பினராவது கைது செய்யப்பட்டிருந்தால் அத்தகைய போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு சுஷில்குமார் ஷிண்டே கடிதத்தில் கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கண்டனம்
மத்திய மந்திரியின் இந்த கடிதத்திற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறும்போது, ‘அவர் எந்த மதத்தையும் குறிப்பிடாமல் இந்தியர் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஷிண்டே மதங்களின் பெயரால் நாட்டில் பிரிவினையை உண்டாக்க நினைக்கிறார்’ என்றார்.
வெங்கையா நாயுடு கூறும்போது, ‘நடைபெற இருக்கும் தேர்தலை மனதில் வைத்து ஓட்டு வங்கி அரசியலுக்காக ஷிண்டே இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார். இது அரசியல் சாசனத்துக்கு முரணானது, கேள்விக்குரியது. இதனை உடனடியாக திரும்ப பெறவேண்டும்’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.ராஜாவும், பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுகளை கவருவதற்காக அவர் முயற்சித்து இருக்கிறார். சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறியுள்ளார்.
ஷிண்டே மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சுஷில்குமார் ஷிண்டே, ‘‘பாரதீய ஜனதா கட்சி அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது என்னுடைய வழக்கமான பணி தான். அதை நான் செய்திருக்கிறேன்’’ என்றார்.
No comments:
Post a Comment