Sunday, 15 September 2013

வாயில் விஷம் ஊற்றி இளம்பெண் கொலை



காதலனோடு ஓடியதால் இளம் பெண்ணுக்கு வாயில் விஷத்தை ஊற்றி கொடூரமாக கொலை செய்ததாக, 2 அண்ணன்கள் கைது செய்யப்பட்டனர்.
இளம் பெண்
பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியைச் சேர்ந்தவர், மாயாண்டி. அவருடைய மகன்கள், முருகன் (வயது 24), சுடலைமுத்து. அவருடைய 17 வயது மகள் கோமதி, தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே உள்ள கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை, வீட்டில் கோமதி வாயில் நுரை தள்ளியபடி, தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு வரப்பட்டது.
திடுக்கிடும் தகவல்
கோமதி தற்கொலை செய்து இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
கோமதி வேலை செய்யும் ஆலையில் தூத்துக்குடி மாவட்டம், திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் முருகன் என்பவர் வேலை செய்து வந்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இவர்களுடைய காதல் கோமதி வீட்டுக்கு தெரியவந்தது.
முருகன் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருடைய அண்ணன்கள் கோமதியை கண்டித்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கோமதி தொடர்ந்து முருகனுடன் தொடர்ந்து பழகி வந்தார்.
காதலனுடன் ஓட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகன், கோமதியை அழைத்து கொண்டு தன்னுடைய வீட்டுக்கு சென்று விட்டார். இதை கேள்விப்பட்ட கோமதியின் அண்ணன்கள் முருகன், சுடலைமுத்து ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள், முருகன் வீட்டுக்குச் சென்று கோமதியிடம் நைசாக பேசி, சீவலப்பேரிக்கு அழைத்து வந்தனர். குடும்ப கவுரவத்தை குழி தோண்டி புதைத்து விட்டாயே என இருவரும் தங்கையை திட்டினார்கள்.
வாயில் விஷம் ஊற்றி
பின்னர் கோமதியை அடித்து உதைத்து, அவளுடைய வாயில் விஷத்தை ஊற்றியதாக தெரிய வருகிறது. சிறிது நேரத்தில் கோமதி துடி துடித்து பரிதாபமாக இறந்தார். கொலையை மறைக்க கோமதியை அவர்கள் தூக்கில் தொடங்க விட்டதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.
2 அண்ணன்கள் கைது
இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியின் அண்ணன்கள் முருகன், சுடலைமுத்து ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment