Tuesday, 17 September 2013

குழந்தையை வீட்டுக்குள் புதைத்து விட்டு கடத்தல் நாடகம் ஆடிய தாய்


பாலூட்டும் போது மூச்சு திணறி இறந்ததாக கூறி குழந்தையை வீட்டிற்குள் புதைத்து விட்டு, குழந்தை கடத்தப்பட்டதாக தாய் நாடகம் ஆடினார். இது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
28 நாள் குழந்தை
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஷகிலா பேகம் (வயது 26). இவருக்கும், சாகுல்ஹமீது (32) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த 28 நாட்களுக்கு முன்பு ஷகிலா பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 15-ந் தேதி மதியம் வீட்டில் குழந்தையை தூங்க வைத்து விட்டு, ஷகிலா பேகம் வெளியே சென்றதாகவும், குழந்தையின் அருகில் அவரது 2 பாட்டிகளும் படுத்து இருந்ததாகவும் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்றும் ஷகிலா பேகம் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
விசாரணை
இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடினார்கள். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.
இது குறித்து போலீஸ் விசாரணை சென்றுகொண்டிருந்த நேரத்தில், குழந்தையின் தாயார் ஷகிலா பேகம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது, அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது திடீரென்று குழந்தைக்கு புரை ஏறியதாகவும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டதாகவும், குழந்தை இறந்த விவரம் கணவருக்கு தெரிந்தால் பிரச்சினை பெரிதாகி விடும் என்று கருதி யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்பக்கம் குழிதோண்டி குழந்தையை புதைத்து விட்டதாகவும் கூறினார்.
பிணம் தோண்டி எடுப்பு
பின்னர் குழந்தை மாயமாகி விட்டதாக கடத்தல் நாடகம் ஆடியதாகவும், போலீஸ் விசாரணையில் தனது குட்டு வெளிப்பட்டு விட்டதாகவும் ஷகிலா பேகம் போலீசில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து குழந்தையை புதைத்த இடத்தையும் ஷகிலா பேகம் போலீசாரிடம் அடையாளம் காட்டினார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தை இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இரவு நேரமாகி விட்டதால் குழந்தையை மறுநாள் தோண்டி எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலையில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன் கூறியதாவது:-
கொலையா?
பாலூட்டும் போது புரையேறி குழந்தை இறந்து விட்டதாக குழந்தையின் தாய் ஷகிலா பேகம் கூறியுள்ளார். அப்படியே குழந்தை இறந்தாலும் உடனே ஏன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவில்லை. குழந்தை இறந்து விட்டது என்று ஷகிலா பேகத்திற்கு எப்படி தெரியும். மேலும் குழந்தை இறந்த விவரத்தை ஷகிலா பேகம் ஏன் வீட்டில் உள்ள உறவினர்களிடம் தெரிவிக்க வில்லை என்பது தெரிய வில்லை.
எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது புரையேறி இறந்ததா? அல்லது விஷம் கொடுத்து கொல்லப்பட்டதா? அல்லது கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதா? என்பது தெரியவரும். எனவே பிரேத பரிசோதனையின் முடிவுகள் வந்த பிறகே வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment