குஜராத்தில் கரசேவகர்கள் பயணம் செய்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2002 பிப்ரவரி 27-ந்தேதி எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பெருமளவில் இனக்கலவரங்கள் மூண்டன. இந்த இனக்கலவரங்களை முதல்-மந்திரி நரேந்திரமோடி கட்டுப்படுத்த தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்காரணமாக கடந்த 2005-ம் ஆண்டு நரேந்திரமோடிக்கு அமெரிக்கா 'விசா' வழங்க மறுத்து விட்டது. அது இன்றுவரை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது நரேந்திரமோடி, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 'விசா' வழங்குவது தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் உண்டா?" என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மேரி ஹார்ப், "நீண்ட காலமாக இருந்து வருகிற அமெரிக்காவின் விசா கொள்கையில் தனி நபருக்காக மாற்றம் இல்லை. முதல்-மந்திரி நரேந்திரமோடி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், அவர் விசா கேட்டு விண்ணப்பிப்பதை வரவேற்கிறோம். மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் போலவே பரிசீலிப்போம்" என பதில் அளித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், "அந்த பரிசீலனை என்பது அமெரிக்க சட்டப்படியே இருக்கும். அந்த பரிசீலனையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நான் யூகிக்கப்போவதில்லை" என்றார்.
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்தும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "இந்தியாவின் உள்நாட்டு அரசியல்பற்றி நான் கருத்து கூறப்போவதில்லை. அதை இந்திய மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது குறித்து நிச்சயமாக நான் கருத்து தெரிவிக்க முடியாது" எனக்கூறி பதில் அளிக்க மறுத்து விட்டார்
No comments:
Post a Comment