Monday, 30 September 2013

ராஞ்சியில் பெண்கள் பேருந்து தொடக்கம்

ராஞ்சியில் அடுத்த வாரத்திலிருந்து இயங்கத் தொடங்கும் பெண்கள் பேருந்து


ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் பெண்களுக்கான சிறப்புப் பேருந்து சேவை இந்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது. பெண்கள் தாங்கள் இரு சக்கர வாகனங்களிலோ, பொதுப் பேருந்துகளிலோ செல்லும்போது துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகத் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இதிலிருந்து அவர்கள் வெளிவரவும், சாலைப் பயணப் பாதுகாப்புக்கும் இந்தப் பெண்கள் பேருந்து உதவிகரமானதாக இருக்கும் என்று போக்குவரத்துக் காவல்துறைத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் குறிப்பிட்டார். 

இதுமட்டுமின்றி, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் பெண்களின் பாதுகாப்பான பிரயாணங்களுக்கு ஆவன செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது ராஞ்சி நகரில் இயங்கிக் கொண்டிருக்கும் 70 பேருந்துகளில் ஒன்று பெண்கள் பேருந்தாக மாற்றப்படலாம். அதன்பின்னர் தேவைகளுக்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.புதிய பெண்கள் பேருந்து தினமும் காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை செயல்படும். 

துர்வாவில் தொடங்கி ஹீனு, டோரண்டா, சுஜாதா சவுக், கோஸ்னர் கல்லூரி, கனடடோலி சவுக், ஜெயில் ரோடு, கச்சேரி சவுக், கரம்டோலி, பரியாட்டு பூட்டிமோரில் முடிவடையும். இந்த வழித்தடம் நகரின் அனைத்துக் கல்லூரிகள், விடுதிகள் ஆகியவற்றின் வழியே செல்லுவதால் மாணவிகளுக்கும், பணி புரியும் பெண்களுக்கும் இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் ராஜீவ் தெரிவித்தார்.

சிறப்புப் பேருந்தில் பெண் நடத்துனர் உட்பட ஒரு பெண் காவலரும் பணியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்தப் பேருந்தின் பதிவு எண், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் தொலைபேசி எண்கள், முகவரிகள் உட்பட ஹெல்ப்லைன் நம்பரும் பேருந்தின் உட்புறத்தில் குறிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் புகார் கொடுக்க விரும்பும் பெண்கள் காவல்துறையை எளிதில் அணுக முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற பொது பேருந்துகளிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து இயக்குனர்கள், நடத்துனர்கள் அனைவரின் விபரங்களும் காவல்துறையிலும் பதிவு செய்யப்படும் என்றும் ராஜீவ் தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுனர்களும் இளம்சிவப்பு நிற ஆட்டோக்களை அறிமுகப்படுத்தி அவற்றைப் பெண் பயணிகளுக்கு மட்டுமே ஓட்டலாம் என்று தெரிவித்த ராஜீவ் ரஞ்சன் அதுபோல் முன்வருபவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் வசதிகள் போக்குவரத்துக் காவல்துறையினரால் வழங்கப்படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment