Saturday, 7 September 2013

மதுகுடிக்க வற்புறுத்திய கணவரின் விடுதலையை எதிர்த்து மனைவி



மதுகுடிக்க வற்புறுத்திய கணவரை விடுதலை செய்யக்கூடாது என்று மனைவி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு மறு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுவும், நவீன உடையும்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் நிஜாம் முகைதீன். திருமணத்துக்குப்பிறகு இவர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 1998-99-ம் ஆண்டுகளில் வசித்தனர்.
இந்த நிலையில், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாத்திமா புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அமெரிக்காவில் என்னை மது அருந்தச்சொல்லி முகைதீன் வற்புறுத்தினார். நவீன உடைகளை உடுத்தவேண்டும் என்றும் கூறினார். ஆனால், இதற்கு நான் மறுத்துவிட்டேன். எனவே, என்னை பல விதங்களில் அவர் துன்புறுத்தினார். வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார் அளித்தபிறகு பாத்திமாவிடம் ‘தலாக்’ சொல்லி, முகைதீன் விவாகரத்து செய்துவிட்டார்.
பாத்திமாவின் புகாரின் அடிப்படையில், முகைதீன் உட்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கோவை மாஜிஸ்திரேட்டு விசாரித்து கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி தீர்ப்பளித்தார்.
விரைவு கோர்ட்டு விடுதலை
அதில், முகைதீனுக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற இரண்டு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து முகைதீன் அப்பீல் செய்தார். அப்பீல் வழக்கை கோவை விரைவு கோர்ட்டு விசாரித்தது. அப்பீல் வழக்கை ஏற்றுக்கொண்டு முகைதீனை விடுதலை செய்து, கடந்த 2006-ம் ஆண்டு மே 29-ந்தேதி விரைவு கோர்ட்டு உத்தரவிட்டது.
மது அருந்த வற்புறுத்தினார், நவீன உடைகளை அணியச்சொன்னார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரமாக ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி முகைதீனை விரைவு கோர்ட்டு நீதிபதி விடுதலை செய்தார்.
மீண்டும் விசாரணை
இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாத்திமா குற்ற மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனைவியை மது அருந்தச்சொல்லி வற்புறுத்துவது, நவீன ஆடைகளை அணியச் சொல்வது போன்ற குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரமாக ஆவணங்களை எதிர்பார்க்க முடியாது. அந்த குற்றச்சாட்டின் இயல்புத் தன்மையை ஆராய வேண்டுமே தவிர, ஆவணங்களைத் தேடக்கூடாது. குற்றச்சாட்டின் இயல்புத்தன்மையே ஒரு ஆதாரம்தான்.
‘தலாக்’ கூறிவிட்டதால் இனி குற்றச்சாட்டுகளை விட்டுவிடலாம் என்று கூறிவிட முடியாது. ஏனென்றால், கூறப்படும் அந்த குற்றங்கள் நடந்தது, ‘தலாக்’ கூறுவதற்கு முன்பாகத்தான். எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு உத்தரவிடுகிறேன். அதன்படி விரைவு கோர்ட்டுக்கு விசாரணைக்காக வழக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment